சிஏஜி அறிக்கைப்படி ரூ.382 கோடி ஊழலில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நேரடி தொடர்பு இருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் குற்றம்சாட்டி உள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மக்கான் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தலைமை கணக்கு தணிக்கையாளர் அமைப்பு (சிஏஜி) 14 அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அவற்றில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகளை சட்டப்பேரவையில் வெளியிடுவதை அர்விந்த் கேஜ்ரிவால் தடுக்கிறார் என துணைநிலை ஆளுநரும், துணைநிலை ஆளுநர் தடுக்கிறார் என கேஜ்ரிவாலும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் பலன் கேஜ்ரிவாலுக்கு சென்றது அம்பலமாகி உள்ளது.
14-வது சிஏஜி அறிக்கையில் சுகாதாரத் துறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதில் 3 மருத்துவமனைகளில் டெண்டர் தொகைக்கும் கூடுதலாக ரூ.382 கோடி செலவிடப்பட்டதாகவும் இதில் கேஜ்ரிவாலுக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும். இதனால்தான் சிஏஜி அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய கேஜிரிவால் முட்டுக்கட்டை போட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.