வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஞானசேகரனை மருத்துவப் பரிசோதனை செய்ததில், அவர் வலிப்பு வந்ததுபோல நாடகமாடியது தெரியவந்துள்ளது. இந்நிலையில், அவரிடம் சிறப்பு புலனாய்வு குழு மீண்டும் விசாரணையைத் தொடங்கி உள்ளது. மேலும், ஞானசேகரனுக்கு 6 போலீஸாருடன் தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது.
இக்குழுவினர், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் எஃப்ஐஆர் வெளியான வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளையும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையின்போது, செல்போன், லேப்டாப்பில் உள்ள ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்கள் யார்? என்பது குறித்து வீடியோவை நேரடியாகக் காண்பித்து விடிய விடிய விசாரணை நடத்தினர். அப்போது, நேற்று முன்தினம் அதிகாலை ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸார், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஞானசேகரனை அனுமதித்தனர். அங்கு கைதிகள் வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதும், அவரது உடல்நிலை சீராக இருப்பதும் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்திருப்பதாக போலீஸார் கூறினர். மேலும், விசாரணையை திசை திருப்பும் நோக்கில் அவர் வலிப்பு ஏற்பட்டதுபோல நாடகமாடியுள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸார், ஞானசேகரனை டிஸ்சார்ஜ் செய்து மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இதில், அடையாறு போலீஸார் 6 பேருடன் ஞானசேகரன் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, அந்த 6 போலீஸாரையும் அடையாளம் கண்டு, அவர்களது செல்போன்களைப் பறிமுதல் செய்து, சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஃப்ஐஆர் வெளியான வழக்கில் ஏற்கெனவே 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அபிராமபுரம் காவல் நிலைய எழுத்தர் மருதுபாண்டியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.