வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்பின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையால், பெரும்பாலான அமெரிக்க நட்பு நாடுகளும் சீன ஆதரவு நிலைப்பாட்டுக்கு நகரும் என சர்வதேச விவகாரங்களை உற்று நோக்கும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா, முதல் பெரிய பொருளாதாரமான அமெரிக்காவின் செல்வாக்குக்கு சவால் விடக்கூடிய நாடாக விளங்கி வருகிறது. சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்த, அமெரிக்கா “ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன்” கூட்டாண்மைகளை உருவாக்கும் உத்தியை நீண்ட காலமாக கடைப்பிடித்து வருகிறது.
இந்த பின்னணியிலயே அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடங்கிய குவாட் அணிக்கு, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் முக்கியத்துவம் அளித்து வந்தார். ஆனால், இந்த மூன்று அமெரிக்க நட்பு நாடுகளுடனான சீனாவின் உறவு தற்போது மேம்பட்டு வருகிறது. அதேபோல், பிரிட்டனில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று கெய்ர் ஸ்டார்மர் பிரதமரானதை அடுத்து, அந்நாட்டுடனான சீனாவின் உறவும் மேம்பட்டு வருகிறது. இது அமெரிக்காவின் அணுகுமுறையை கேள்விக்குறியாகியுள்ளது.
தனது முதல் பதவிக் காலத்தின்போதும், பாரம்பரிய அமெரிக்க கூட்டாளிகளை எதிர்க்க ட்ரம்ப் தயங்கவில்லை. தற்போதும் அதே நிலைப்பாட்டுடன் இருக்கிறார். “அமெரிக்க நட்பு நாடுகளிடமிருந்து ட்ரம்ப் விலகிச் செல்ல வாய்ப்புள்ளது. இதனால் அவர்கள் சீனா மீது அதிக கவனம் செலுத்த முடியும். உண்மையில் இது சீனாவின் ராஜதந்திரத்துக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது” என்று ஷாங்காயில் உள்ள ஃபுடான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தின் டீன் வு சின்போ தெரிவித்துள்ளார். மேலும் அவர், “நாம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் கூறி இருக்கிறார்.
அதேநேரத்தில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் பிரையன் ஹியூஸ், “சீனாவுக்கு கடுமையான போட்டியை கொடுக்கக்கூடிய நிலைப்பாட்டை நோக்கி உலகை அணி திரட்டுவதில் ட்ரம்ப் சாதனை படைத்துள்ளார்” என்று கூறியுள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பதவியேற்ற சில மணி நேரங்களில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்தார். இந்த நடவடிக்கை, சீனாவின் செல்வாக்கை எதிர்ப்பதற்கு குவாட் நாடுகளை பயன்படுத்தும் ட்ரம்பின் நோக்கத்தை வெளிப்படுத்துவதாகப் பார்க்கப்படுகிறது.
எனினும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஜப்பானின் புதிய தலைவர்கள் உலகின் மிகப் பெரிய உற்பத்தியாளரும் முக்கிய கனிமங்களின் ஆதாரமாகவும் இருக்கும் சீனாவுடன் உறவுகளை மேம்படுத்த விருப்பம் காட்டியுள்ளனர். அதிக வரிகளை விதிக்கும் அச்சுறுத்தலை ட்ரம்ப் பின்பற்றினால், அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார பின்னடைவை மீட்டெடுக்க சீனாவின் முதலீடு உதவ வேண்டும் என்று அவர்கள் எண்ணுவதாகக் கூறப்படுகிறது.
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவிடம், கடந்த வாரம் தொலைபேசியில் உரையாற்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங், கொந்தளிப்பான உலகளாவிய சூழ்நிலையை மாற்ற இரு தரப்பினரும் அதிக ஸ்திரத்தன்மையையும் உறுதியையும் கொண்டு வர முடியும் என்று கூறியுள்ளார். இங்கிலாந்து கருவூலத் தலைவர், இந்த மாதம் சீனாவுக்கு வருகை தந்தார். ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு சீனாவும் பிரிட்டனும் பொருளாதார மற்றும் நிதி தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியுள்ளன.
“சீனாவின் பார்வையில், அமெரிக்க நட்பு நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதும், பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதும் சீன – அமெரிக்க பொருளாதார உறவுகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை ஈடுசெய்யும்,” என்று டீன் வு சின்போ கூறியுள்ளார்.
அமெரிக்கா தனது உலகளாவிய தலைமையைத் தக்க வைத்துக்கொள்ள சீனாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்பப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதில் அந்நாட்டின் வலுவான இரு கட்சிகளான குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் ஒருமித்த கருத்துடன் உள்ளன. ஆனால், பைடனை போல் அல்லாமல், நேட்டோ நட்பு நாடான டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை இணைப்பது மற்றும் கனடாவை 51-வது அமெரிக்க நாடாக மாற்றுவது குறித்த தனது சமீபத்திய கருத்துகளால் ட்ரம்ப் அமெரிக்க நட்பு நாடுகளை எரிச்சலூட்டியுள்ளார்.
ட்ரம்பின் சொல்லாட்சி மற்றும் பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மன் அரசியலில் தலையிட எலான் மஸ்க் மேற்கொண்ட முயற்சிகள், “ஓர் அலை விளைவை ஏற்படுத்தும் என்பது உறுதி” என்று வாஷிங்டனில் உள்ள ஸ்டிம்சன் மையத்தில் உள்ள சீனா திட்டத்தின் இயக்குனர் சன் யூன் கூறியுள்ளார்.
“ட்ரம்பின் கொள்கைகள் குறித்த நிச்சயமற்ற தன்மை, சீனாவையும் ஜப்பானையும் ஒரு நிலையான உறவைத் தேடத் தூண்டுகிறது” என்று டோக்கியோவில் உள்ள சூவோ பல்கலைக்கழகத்தின் ராஜதந்திர நிபுணர் டைசோ மியாகி கூறினார். ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு ஜப்பானிய வெளியுறவு அமைச்சர், சீனாவுக்குப் பயணம் செய்துள்ளார். மேலும், ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு பாதுகாப்பு பரிமாற்றங்களை மீண்டும் தொடங்க சீன ராணுவ அதிகாரிகள் கடந்த வாரம் டோக்கியோ சென்றனர்.
“ஒரு வகையில் இது ட்ரம்ப் விளைவு. பல நாடுகளும் இதேபோன்றுதான் சிந்திக்க வாய்ப்புள்ளது, இது அவர்களின் ராஜதந்திர நடவடிக்கைகளை ஊக்குவிக்கக்கூடும்” என்று டைசோ மியாகி தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவை முதன்மையாகக் கொண்ட ட்ரம்ப்பின் திட்டங்களை பல ஐரோப்பியத் தலைவர்கள் வரவேற்காமல் இருக்கலாம். ஆனால், அதற்காக அவர்கள் அனைவரும் அதிக வர்த்தகத்துக்காக சீனாவுக்குச் செல்வார்கள் என்ற எண்ணம் சீன நண்பர்கள் சிலரின் கற்பனையான சிந்தனையாகும்” என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் SOAS சீன நிறுவனத்தின் இயக்குநர் ஸ்டீவ் சாங் கூறினார்.
ட்ரம்பின் வருகை நல்லிணக்கத்துக்கு வழிவகுக்காது என்று பிரிட்டன் கருதுகிறது. எனினும், பெரும்பாலானோர் வாஷிங்டனுடன் கூட்டாளிகளாக இருக்க விரும்புகிறார்கள். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தனது புத்தாண்டு உரையில் உலகளாவிய ராஜதந்திரத்துக்கான தனது பார்வையை கோடிட்டுக் காட்டி, தனது நாடு ட்ரம்பின் “உறுதியான நட்பு நாடு” என்று அறிவித்தார்.
அவரும் மற்றவர்களும் ட்ரம்ப் சாதகமாக பதிலளிப்பார் என்றே நம்புகிறார்கள். எனினும், அமெரிக்க அதிபர் எந்தப் பாதையை தேர்ந்தெடுக்கிறார், உலகின் பிற பகுதிகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்பதைப் பொறுத்தே சர்வதேச அரசியல் களத்தின் போக்கு இருக்கும்.