மதுரை: “திருப்பரங்குன்றம் மலைக்கு வந்த நவாஸ்கனி எம்.பி-யை கைது செய்ய வேண்டும்” என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தினார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் மலைமேலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு தடை விதித்த நிலையில், எஸ்டிபிஐ கட்சியினர் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்து முன்னணியினரும் பேரணி நடத்தினர். இது தொடர்பாக இரு தரப்பிலும், 400 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமீது, வக்பு வாரிய தலைவரும், ராமநாதபுரம் எம்.பி.யுமான நவாஸ்கனி திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று, தர்கா பகுதியை ஆய்வு செய்தனர். நவாஸ்கனி எம்.பியுடன் மலைக்கு சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மலைக்கு போகும் படிக்கட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இன்று திருப்பரங்குன்றம் சென்றார். காலை 10.30 மணிக்கு மலைமேலுள்ள காசிவிசுவநாதர் கோயிலுக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்றார். 5 இடங்களில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்து கோயிலை அடைந்தார். விசுவநாதர், விசாலாட்சி அம்மனை தரிசத்தார். இதன்பின், மலைக்கு பின் பகுதியில் நிலையூர் ரோட்டில் காசிவிசுவநாதர் கோயிலுக்கு செல்லும் வழியாக 12.30 மணிக்கு மலை அடிவார பகுதிக்கு திரும்பிய ஹெச்.ராஜா திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “திருப்பரங்குன்றம் கந்தர்மலை தொடர்பான வழக்கு 100 ஆண்டு பழமையானது. இதுபற்றி பல்வேறு நீதிமன்றங்களில் தீர்ப்பு வந்துள்ளது. 1931-ல் லண்டனிலுள்ள பிரிவிக் கவுன்சில் மூலம் இம்மலை முழுவதும் அறுபடை வீடுகளில் முதல் படையான முருகனுக்கே சொந்தமானது என தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. 1994-ல் தலவிருச்சமான கல்லத்தி மரத்தில் இஸ்லாமியர்கள் பிறை கொடி கட்டினர். இதற்கும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் 1931-ல் என்னவோ அதுவே தொடரவேண்டும் என சொல்லப்பட்டது.
ஆனால், இஸ்லாமியர்கள் கொஞ்சம், கொஞ்சமாக வந்து, தற்போது நாடாளுமன்ற உறுப்பினருடன் சென்றவர்கள் காசி விசுவநாதர் கோயிலுக்கு செல்லும் படிக்கட்டில் வைத்து பிரியாணி சாப்பிட்டுள்ளனர். இதன்மூலம் இந்துக்களுடன் அவர்கள் மோத திட்டமிடுகின்றனர் என்ற சந்தேகம் எழுகிறது. சிக்கந்தர் மலை எனக் கூறி திருப்பரங்குன்றம் கந்தர் மலைக்கு நவாஸ்கனி எம்.பி. மதவெறி நோக்குடன் வந்துள்ளார். அவர் மீது வழக்கு மட்டும் பதிந்தால் போதாது. அவரை கைது செய்ய வேண்டும். அவர்கள் பாதை அல்உம்மா அமைப்பில் இருக்கிறது.
நவாஸ்கனி மற்றும் அவரது கட்சி சார்ந்தவர்கள் மீது எவ்விதத்திலும் பாரபட்சம் காட்டாமல் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். 1931-ல் இருந்த நிலை தொடரவேண்டும் என்ற போதிலும், தற்போது மலை தர்கா வழிபாடு முறையில் மாற்றம் இல்லை. இடத்தை வரிவாக்கம் செய்துள்ளனர்.
ஆடு, கோழிகளை வெட்டுவோம் என கூறுவது உள்நாட்டுப் போருக்கு அறைகூவல் விடுகின்றனர். திமுக அரசு வந்த பிறகு இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளுக்கு துணிச்சல் வந்திருக்கிறது. ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார். ஹெச்.ராஜாவின் வருகையையொட்டி திருப்பரங்குன்றம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.