பணியிடங்களில் பெண்களிடம் விரும்பத்தகாத செயலில் ஈடுபடுவதும் பாலியல் துன்புறுத்தலே: ஐகோர்ட்

சென்னை: பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதும், விரும்பத்தகாத செயல்களைச் செய்வதும், சொல்வதும்கூட ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல்தான் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரி, தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அங்கு பணிபுரியும் 3 இளம்பெண்கள் அந்நிறுவனத்தில் உள்ள விசாகா குழுவில் புகார் அளித்தனர். அந்தக் குழு சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிக்கு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வோ அல்லது பதவி உயர்வோ வழங்கக் கூடாது என பரிந்துரை செய்தது.

விசாகா குழுவின் இந்த பரிந்துரையை எதிர்த்து மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரி, சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “இது தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க எந்த வாய்ப்பும் வழங்காமல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும்” என கோரியிருந்தார். அதையடுத்து அந்த அறிக்கையை தொழிலாளர் நல நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் மென்பொருள் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது நிறுவனம் தரப்பில், “குற்றம் சாட்டப்பட்ட நபர், பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் பின்னால் நின்று கொண்டு அவர்களைத் தொட்டு பேசுவதும், கைகுலுக்கக் கூறுவதும், உடை அளவு என்ன என்று கேட்டும் தொல்லை கொடுத்து வந்துள்ளார். விசாகா குழு இயற்கை நீதிகளுக்கு உட்பட்டே விசாரணை நடத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 3 பெண்களும் சம்பந்தப்பட்ட நபரின் அநாகரீகமான, பாலியல் ரீதியிலான செய்கை தங்களை மனதளவிலும், உடல் தியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விசாரணை குழுவிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்” என வாதிடப்பட்டது.

சம்பந்தப்பட்ட அதிகாரி தரப்பில், “அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் அவர்களின் பின்னால் நிற்கவில்லை. உயர் அதிகாரி என்ற முறையில் அந்தப் பெண்கள் செய்யும் பணிகளை அவர்களின் பின்னால் நின்று கண்காணித்தார்” என தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா பிறப்பித்துள்ள உத்தரவில், “பணியிடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதும், விரும்பத்தகாத செயல்களை செய்வதும், சொல்வதும் கூட ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல்தான். எனவே இந்த வழக்கில் தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விசாகா குழு அளித்துள்ள பரிந்துரைகள் செல்லும்.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க வழிவகை செய்யும் சட்டம், பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு நடத்தையை எப்படி உணருகின்றனர் என்பதை முதன்மைப்படுத்துகிறதே அன்றி, துன்புறுத்துபவர்களின் நோக்கங்களை பார்க்க வேண்டிய அவசியமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.