ஜெருசலேம்,
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்தது. இந்த போரை நிறுத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. அதன் அடிப்படையில், காசா முனையில் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. அதேபோல், காசாவில் தாக்குதலை நிறுத்தவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில் மேற்கு கரையில் இஸ்ரேலியர்கள் சென்ற பஸ் மீது கொடிய தாக்குதல் நடத்திய இரண்டு பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றன. இஸ்ரேல் ராணுவ கூற்றுப்படி, கடந்த 6ம் தேதி அன்று இஸ்ரேலியர்கள் சென்ற பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 2 பாலஸ்தீனியர்கள் மேற்கு கரையில் உள்ள புர்கின் கிராமத்தில் பதுங்கியிருந்தனர். அவர்கள் மீது இரவு முழுவதும் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஒரு பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.