புதுடெல்லி: சிவ சேனா நிறுவனர் பால் தாக்கரேவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பாலாசாகேப் தாக்கரேவின் பிறந்தநாளில் நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். பொது நலனுக்காகவும் மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காகவும் அவர் காட்டிய அர்ப்பணிப்புக்காக அவர் பரவலாக மதிக்கப்படுகிறார், நினைவுகூரப்படுகிறார். தனது அடிப்படை நம்பிக்கைகள் என்று வரும்போது அவர் சமரசம் செய்யாமல் இருந்தார், இந்திய கலாச்சாரத்தின் பெருமையை மேம்படுத்துவதில் எப்போதும் பங்களித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சனாதன கலாச்சாரத்திற்கும், தேசத்தின் சித்தாந்தத்திற்கும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் மதிப்பிற்குரிய பாலாசாகேப் தாக்கரே. அவர் எப்போதும் தேச நலனையே முதன்மையாகக் கொண்டிருந்தார். பாதகமான சூழ்நிலைகளிலும் கூட தனது கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்யாத தாக்கரேவின் சித்தாந்த உறுதி எப்போதும் ஊக்கமளிக்கக்கூடியது. அவர் தனது பணியில் தேசபக்திக்கு முன்னுரிமை அளித்தார். மாபெரும் தேசியவாதியான பாலாசாகேப் தாக்கரேவின் பிறந்தநாளில் அவருக்கு எனது மனமார்ந்த அஞ்சலிகள்” என தெரிவித்துள்ளார்.
சிவ சேனா தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மரியாதைக்குரிய இந்து இதயப் பேரரசர், சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரேவின் பிறந்தநாளில் அவரது புனித நினைவுக்கு பணிவான வணக்கங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பாலாசாஹேப் தாக்கரே பிறந்தநாளில் அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலிகள். அவரை தனிப்பட்ட முறையில் அறிந்ததன் மூலமும், பல ஆண்டுகளாக அவரது வழிகாட்டுதலையும் ஆதரவையும் பெற்றதன் மூலமும் அதிர்ஷ்டசாலியாக என்னை உணர்கிறேன்.
அவர் ஒரு புகழ்பெற்ற தலைவராக இருந்தபோது நான் அவரை முதலில் சந்தித்தேன். நான் அப்போது, 29 வயது இளம் தொழில்முனைவோராக இருந்தேன். செல்லுலார் துறையில் எனது முதல் நிறுவனத்தையும் பிராண்டையும் உருவாக்கி, மும்பையின் முதல் செல்லுலார் மொபைல் சேவையை உருவாக்கினேன்.
அந்த முதல் சந்திப்பிலிருந்து, பாலாசாஹேப் தொடர்ந்து ஊக்கத்தையும் ஆதரவையும் அளித்தார். மும்பையில் எனது வெற்றிக்கும் நம்பிக்கைக்கும் அவர் உண்மையிலேயே ஒரு பெரிய காரணமாக இருந்தார். அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.