மகா கும்பமேளாவுக்குச் செல்வதற்காக வீடுகளில் கொள்ளையடித்த நபர்

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இதுவரை சுமார் 10 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும்.

இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் மகா கும்பமேளாவுக்குச் செல்வதற்காக வீடுகளில் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரவிந்த் அலியா போலா என்ற நபர் கடந்த 17-ம் தேதி டாப்ரியின் ராஜ்புரியில் உள்ள 3 வீடுகளில் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் நகைகளைக் திருடியுள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அரவிந்த் அலியா, “எனது தந்தை ஒரு கூலித் தொழிலாளி. தாய் வீட்டு வேலை செய்கிறார். நானும், எனது நண்பர்களும் மகா கும்பமேளாவுக்குச் செல்ல விரும்பினோம். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக கும்பமேளா செல்வதற்கு பணம் இல்லை. அதனால் கொள்ளையடித்தேன்” என்று கூறியுள்ளார். இருப்பினும் அரவிந்த் கொள்ளையடிப்பது இது முதல் முறை அல்ல என்றும், அவர் மீது 16 திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.