வன்தாரா திட்டத்தின் கீழ் 20 யானைகள், மரங்களைத் தூக்கிச் செல்லும் தொழிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளில் பழக்கப்பட்ட யானைகள், வெட்டப்படும் மரங்களை தூக்கிச் செல்லும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் வன்தாரா திட்டத்தின் கீழ் 20 யானைகள் அண்மையில் மீட்கப்பட்டன.
வன்தாரா மீட்பு மையத் திட்டமானது, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் திரிபுரா மாநில உயர் நீதிமன்றத்தின் உயர்நிலைக்குழு ஒன்று வனப்பகுதிகளுக்குச் சென்று இந்த 20 யானைகளை மீட்டது. இந்த யானைகள் அங்கு, சங்கிலியால் கட்டப்பட்டு மரங்களை தூக்கிச் செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
மீட்கப்பட்ட இந்த யானைகள் தற்போது வன்தாரா மீட்பு மையத்தில் விடப்பட்டுள்ளன. இந்த யானைக் கூட்டத்தில் 10 ஆண் யானை, 8 பெண் யானை, 2 குட்டி யானைகள் அடங்கும். வன்தாரா மறுவாழ்வு மையத்துக்கு வந்த பின்னர் இந்த யானைகள் தற்போது சுதந்திரமாக விடப்பட்டுள்ளன என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.