வயநாடு மறுவாழ்வுக்கு மத்திய அரசிடமிருந்து இன்னும் நிதியுதவி கிடைக்கவில்லை: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கென மத்திய அரசு இதுவரை எந்த உதவியும் வழங்கவில்லை என்றும், முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட ரூ.712.98 கோடி, உயிர் பிழைத்தவர்களுக்கு உதவ பயன்படுத்தப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரள சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, ​​வயநாடு தொகுப்புக்காக பெறப்பட்ட தொகை குறித்து ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) எம்எல்ஏ குருக்கோளி மொய்தீன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்தார். அப்போது அவர், “வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்குப் பிறகு முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்காக (CMDRF) மத்திய அரசு ரூ.712.98 கோடி வழங்கியது. இதைத் தவிர, இம்மாதம் 17-ம் தேதி வரை வேறு எந்த உதவியையும் மத்திய அரசு வழங்கவில்லை.

நிலச்சரிவு மறுவாழ்வுக்காக ஆரம்பத்தில் மத்திய அரசிடமிருந்து ரூ.2,221 கோடி கோரினோம். பேரிடருக்குப் பிந்தைய தேவைகள் மதிப்பீடு (PDNA) அறிக்கையின்படி, இன்னும் அதிக நிதி தேவைப்படுகிறது. வயநாடு நிலச்சரிவை ‘கடுமையான இயற்கை பேரழிவு’ என்று மத்திய அரசு அறிவித்ததால், நாடு முழுவதும் உள்ள எம்.பி.க்கள் ரூ.1 கோடி வரை பங்களிக்கலாம். எனவே, உதவி கோரி நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் நான் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளேன்.

CMDRF இல் பெறப்பட்ட நிதி பேரிடரில் இருந்து தப்பியவர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும். மறுவாழ்வு செயல்முறை விரைவில் முடிக்கப்படும். ஜூலை 30 அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து தப்பியவர்களுக்காக, கல்பெட்டாவில் உள்ள எல்ஸ்டோன் எஸ்டேட்டில் 58.50 ஹெக்டேர் மற்றும் வயநாடு மாவட்டத்தில் உள்ள மெப்படி பஞ்சாயத்தில் உள்ள நெடும்பலா எஸ்டேட்டில் 48.96 ஹெக்டேர் பரப்பளவில் மாதிரி டவுன்ஷிப்களை கட்டுவதற்கான மறுவாழ்வுத் திட்டத்தை அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

மறுவாழ்வுக்காக 61 நாட்களுக்குள் நிலத்தை கையகப்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. புனர்வாழ்வு திட்டத்தில் ஒரே நேரத்தில் பல வீடுகள் கட்டப்படும். வீடுகளுக்கு சுமார் ரூ.30 லட்சம் செலவாகும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்.

முன்மொழியப்பட்ட நகரத்துக்கு வெளியே தங்க விரும்பும் நபர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும். முன்மொழியப்பட்ட நகரில் உள்ள வீடுகளில் மறுவாழ்வு பெற, பேரிடர் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வரைவு பட்டியலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இறுதிப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். புனர்வாழ்வு திட்டத்துக்காக பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. CMDRF, SDRF, பல்வேறு ஸ்பான்சர்ஷிப்கள், CSR நிதிகள் மற்றும் மத்திய அரசின் உதவி ஆகியவற்றிலிருந்து இதற்கான நிதி பயன்படுத்தப்படும்.” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.