கடந்த 2015-ம் ஆண்டு உடைந்த கவுரிவாக்கம் தாங்கல் ஏரியை சீரமைக்க வலியுறுத்தி, அதிகாரிகள் முதல் தமிழக முதல்வர்கள் வரை தொடர்ந்து 7 ஆண்டுகளாக முறையிட்டு வருகிறார் அப்பகுதி விவசாயி. தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்தில் கவுரிவாக்கம் தாங்கல் ஏரி உள்ளது. மொத்தம், 48 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த ஏரியின் நான்கு திசைகளிலும் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது.
இதனால், 10 ஏக்கருக்கும் குறைவான பரப்புக்கு இந்த ஏரி சுருங்கிவிட்டது. மழைக்காலங்களில் ஏரியில்தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, கழிவுநீர் கலந்து ஏரி நீர் துர்நாற்றம் வீசுகிறது. இந்த ஏரியை நம்பி 25 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. 2015-ம் ஆண்டு கனமழை நேரத்தில், ஆக்கிரமிப்பு வீடுகள் பாதிப்படைந்ததால் மர்ம நபர்கள் ஏரியின் கரையை உடைத்தனர்.
௮ந்த உடைப்பு இன்று வரை சீரமைக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு மழைக் காலத்திலும் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிற்க வழியின்றி, உடைக்கப்பட்ட பகுதி வழியாக மழைநீர் வெளியேறி விடுகிறது.
இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து பொதுமக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வருவதோடு, விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வட்டாட்சியர், பரங்கிமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், செம்பாக்கம் நகராட்சி ஆணையர் என பலரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ரவி என்பவர் கூறியதாவது: 2015 கனமழையில் கவுரிவாக்கம் தாங்கல் ஏரி கரை சேதமடைந்தது. அதன்பிறகு கரையை சீரமைக்க வேண்டி கீழ்நிலை அலுவலர் முதல், முதல்வர் அலுவலகம் வரை மனு கொடுத்தும் இதுவரை தீர்வு ஏற்படவில்லை.
ஏரியின் உடைப்பு சரி செய்யப்படவில்லை. அதேபோல் எந்த குறைதீர் கூட்டம் நடந்தாலும் தொடர்ந்து மனு அளித்து வருகிறேன். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது அப்போதைய மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் 3 முறையும், செங்கல்பட்டு மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு ஜான் லூயிஸ் ஆட்சியரிடம் 2 முறையும், ராகுல்நாத்திடம் 8 முறையும் அருண் ராஜூடம் 3 முறையும் ஏரிக்கரையை சீரமைக்க கோரி மனு அளித்துள்ளேன்.
அனைவரும் ஏரிக்கரை உடைப்பை சரி செய்வதாக உறுதியளித்தனர். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக ஏரிக்கரை சரமைக்கப்படவில்லை. ஏரியின் மதகுகளும் சேதமடைந்துள்ளன. கழிவுநீரும் தொடர்ந்து ஏரியில் கலக்கிறது. ஏரிக்கரை சீரமைக்காததால் அனைத்து கழிவு நீரும் விவசாய நிலத்தில் தேங்குகிறது. இவ்வாறு அவர் வேதனையுடன் தெரிவித்தார். பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து முறையிடப்போவதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.