இந்த நிதியாண்டின் பட்ஜெட் இன்னும் சில நாள்களில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
2025-2026 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இவர் கடந்த 6 ஆண்டுகளாக, மத்திய நிதியமைச்சராக தொடர்கிறார். இதுவரை இவர் ஏழு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். இந்த ஆண்டு எட்டாவது யூனியன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம் தொடர்ச்சியாக 8 மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை பெறுகிறார்.
இதற்கு முன்பு, தொடர்ச்சியாக 6 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர் முன்னாள் நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாய். இவர் நாடாளுமன்றத்தில் மொத்தம் 10 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். அதில் எட்டு ‘முழு ஆண்டு பட்ஜெட்டுகள்’, இரண்டு ‘இடைக்கால பட்ஜெட்டுகள்’. இவரின் சாதனையை தற்போது நிர்மலா சீதாராமன் முறியடித்துள்ளார். நிர்மலா சீதாராமனுக்கு முன்பு, நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி 2014-2015 ஆம் ஆண்டு முதல் 2018-2019 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 5 பட்ஜெட்களை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக நிதி அமைச்சர் தான் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். ஆனால், சில சூழ்நிலைகளால், பிரதமர் பட்ஜெட்ட தாக்கல் செய்யும் நிலைகள் ஏற்பட்ட காலகட்டங்களும் உள்ளன. அவ்வாறு முதன்முதலாக ஜவஹர்லால் நேரு 1958 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பிறகு இந்திரா காந்தி 1969 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிகழ்வுகளும் உள்ளன.!