அமெரிக்க அதிபராக பதவியேற்ற கையோடு தனது முதல் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் டொனால்டு ட்ரம்ப்.
அதில் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவிப்பு ‘பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது’ என்பதுதான். அதன்படி அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இல்லாத வெளிநாட்டு பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இனி அங்கு குடியுரிமை கிடைக்காது. இந்த புதிய அமெரிக்க குடியுரிமைச் சட்டம் வரும் பிப்ரவரி 20 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. இந்த உத்தரவு அமலுக்கு வந்தவுடன், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும்.
இந்த நடவடிக்கை மூலம் அமெரிக்காவில் ‘பிரசவ சுற்றுலா’வை முடிவுக்குக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. பிரசவ சுற்றுலா என்பது ஒரு பெண் அமெரிக்காவுக்குகுச் சென்று குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒரு நடைமுறை. இதன் மூலம் அந்த பெண் தானாகவே அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுவிடுவார்.
இந்த பிரசவ சுற்றுலா செயல்முறையை அதிகமாக பின்பற்றுபவர்களில் இந்தியர்கள் மற்றும் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த புதிய சட்டம் அமலுக்கு வருவதற்குள் பிப்ரவரி 19 தேதிக்குள் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைக்கும் என்பதால் அதற்குள் ‘C-section’ என்ற உடனடி அறுவைச் சிகிச்சை மூலம் கருவில் இருக்கும் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் அவசரம் காட்டி வருகின்றனர் அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள். 7 மாதம் முதல் 9 மாதம் வரையிலான கர்ப்பிணி பெண்கள் அதிகமான எண்ணிக்கையில் மருத்துவமனையில் அட்மிட்டாகி வருவதாக அதிர்ச்சியானத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.