அமெரிக்காவில் 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் கைது- ராணுவ விமானம் மூலம் நாடுகடத்தல்

வாஷிங்டன்:

அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த 20-ம் தேதி பொறுப்பேற்ற டிரம்ப், அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார். குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் தீவிரம் காட்டுகிறார். இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அதன்படி சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்டமாக 538 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் நுற்றுக்கும் மேற்பட்டோர் ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியிருப்பதாவது:-

சட்டவிரோதமாக குடியேறிய 538 குற்றவாளிகளை டிரம்ப் நிர்வாகம் கைது செய்தது. இதில் ஒருவர் பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர், ட்ரென் டி அரகுவா கும்பலைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பல சட்டவிரோதக் குற்றவாளிகள் ஆகியோரும் அடங்குவர். டிரம்ப் நிர்வாகம் நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தி உள்ளது. வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தல் நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் டுவிட்டர் தளத்திலும் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க டிரம்ப் நிர்வாகம் செய்து வரும் பணியின் ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே இது என்று கூறி உள்ளது. அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சிலரின் பெயர்களையும், அவர்கள் செய்த குற்றங்களையும் குறிப்பிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.