உங்கள் வாக்கு விலைமதிப்பற்றது, அதை ரூ.1,100க்கு விற்றுவிடாதீர்கள் – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி,

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக அதிஷி செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு பாஜக பணம், நகை, சேலைகளை வழங்குவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை, வாக்கு விலைமதிப்பற்றது, அதை ரூ.1,100க்கு விற்றுவிடாதீர்கள் என்று வாக்காளர்களுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், பாஜகவினர் உங்களுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள், அது உங்கள் பணம். ஆனால், உங்கள் வாக்கை ரூ.1,100 பணத்திற்கோ, சேலைக்கோ விற்றுவிடாதீர்கள், உங்கள் வாக்கு விலைமதிப்பற்றது. உங்கள் வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டால் நமது ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும். அது செல்வந்தர்கள் ஆள வழிவகுத்துவிடும். யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். ஆனால், பணம் கொடுக்கும் நபர்களுக்கு வாக்களிக்காதீர்கள்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.