சென்னை: கிராமப்புறங்களில் வீடு தேடி அறுவை சிகிச்சை அளிப்பதற்காக புதிய திட்டம் தொடங்கப்படவுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். இந்திய ரேடியாலஜி மற்றும் இமேஜிங் அசோசியேஷன் (ஐஆர்ஐஏ) சார்பில் 23-வது ‘கதிரியக்க ஆசிய மாநாடு’ மற்றும் 77-வது ஆண்டு கருத்தரங்கம் சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி மாநாட்டை தொடங்கி வைத்தார். இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை முன்னிலை வகித்தார். இந்த மாநாடு 26-ம் தேதி வரைநடைபெறுகிறது. இதில் 44 நாடுகளில் இருந்து 6,000-க்கும் மேற்பட்டமருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.
மாநாட்டின் தொடக்கவிழாவில் ஐஆர்ஐஏ தலைவர் வி.என்.வரபிரசாத், ஐஆர்ஐஏவின் 78-வது புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள மருத்துவர் குர்தீப்சிங்கை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் எல்.முரளிகிருஷ்ணா ஐஆர்ஐஏ ஆண்டு அறிக்கையை வெளியிட்டார்.
பின்னர் கே.ஆர்.குப்தா வாழ்நாள் சாதனையாளர் விருதை மருத்துவர்கள் ஓம்.பிரகாஷ் ஜெ.டவ்ரி, கே.மோகனன் ஆகியோருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
இதையடுத்து மருத்துவர் ஈவ்லின் லாய்மிங் ஹோவுக்கு ஐஆர்ஐஏ கவுரவ உறுப்பினர் அங்கீகாரத்தை விஞ்ஞானி அண்ணாதுரை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் மாநாட்டு ஆண்டு மலரை வெளியிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “நோயை முன்பே கண்டறிந்து சிகிச்சை அளித்தல், நோயின் தீவிரத்தன்மையை கண்டறிதல் போன்றவற்றுக்கு ரேடியாலஜி தொழில்நுட்பம் உறுதுணையாக இருந்து வருகிறது.
இக்கருத்தரங்கம் மூலம் ரேடியாலஜி குறித்த நவீன தொழில்நுட்பம் பயிற்றுவிக்கப்படுவது வரவேற்கத் தக்கது’’ என்றார். விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசும்போது, “வீடு தேடி மருத்துவம் போல வீடு தேடி அறுவை சிகிச்சை திட்டத்தை தொடங்க இருக் கிறோம்.
ரோபோடிக்ஸ் கருவிகள் மூலம் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள், அறுவை சிகிச்சை நிபுணர்களால் 10 மீட்டர் தொலைவில் இருந்து கையாளப்படுகின்றன. இதை மேலும் மேம்படுத்தி ஆயிரம் கி.மீ. தூரத்தில் இருந்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.
இதையொட்டி ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சைக்கான கருவிகளை வாகனங்களில் கிராமப்புறங் களுக்கும், எல்லைகளுக்கும் அனுப்பிவைத்து, மருத்துவர்கள் நகர்ப்புறங் களில் இருந்தவாறே அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் புதிய திட்டம் அடுத்தமாதம் தொடங்கப்படும். இதை மத்திய, மாநில அரசுகளின் காப்பீடு திட்டத்துக்குள் கொண்டுவர முயற்சித்து வருகி றோம்” என்று தெரிவித்தார்.