புதுடெல்லி: குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை காரணமாக மத்திய டெல்லியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாட்டின் 76-வது குடியரசு தினம் தலைநகர் டெல்லியில் வரும் 26-ம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் குடியரசு தின விழா அணிவகுப்புக்கான முழு ஆடை ஒத்திகை கடமைப் பாதையில் விஜய் சவுக் முதல் செங்கோட்டை வரை நேற்று நடைபெற்றது. இதனால் மத்திய டெல்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக இந்தியா கேட், ஐடிஓ (வருமான வரி அலுவலகம்) அருகில் உள்ள பகுதிகளில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் அவதியுற்றனர்.
ரிங் ரோடு, விகாஸ் மார்க், சிவாஜி ஸ்டேடியம் மெட்ரோ நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர். டெல்லி -நொய்டா எல்லையில் பாதுகாப்பு சோதனைகள் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக நொய்டாவை சேர்ந்த ஸ்நேகா ராய் கூறினார்.
அணிவகுப்பு ஒத்திகை காரணமாக இந்தியா கேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்கள் குறித்து அறிவிப்பை டெல்லி போலீஸார் நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தனர்.