குடும்பஸ்தன் விமர்சனம்: அட்டகாசம் மணிகண்டன்; இந்த குடும்பஸ்தன் அலப்பறைகள் சிக்ஸர் அடிக்கிறதா?

நவீன் (மணிகண்டன்) தனது காதலி வெண்ணிலாவை (சாந்வி மேக்கஹனா) நண்பர்களின் உதவியோடு பதிவுத் திருமணம் செய்துகொள்கிறார். அதில் நவீனின் பெற்றோருக்கு அதிருப்தி இருந்தாலும் அவர்களின் வீட்டிலேயே தம்பதிகளின் இல்லற வாழ்க்கை தொடங்குகிறது. நவீன் ஒரு விளம்பர டிசைனிங் நிறுவனத்தில் வேலை செய்ய, வெண்ணிலா ஐ.ஏ.எஸ் தேர்வுக்குப் பயிற்சி எடுத்து வருகிறார். நவீனின் தந்தை ரியல் எஸ்டேட் புரோக்கராகப் பெரிதாக வருமானம் ஈட்டாததால் மொத்த குடும்பத்தின் பொறுப்பும் நவீனின் மேல் விழுகிறது. இந்த நிலையில் அலுவலகத்தில் நடந்த ஒரு பிரச்னையில் அவருக்கு வேலை பறிபோக, அதே சூழலில் அக்கா கணவரின் (குரு சோமசுந்தரம்) முன் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற நெருக்கடியும் உண்டாகிறது. இதனால் வேலையில்லாமல் இருப்பதை அனைவரிடமும் மறைத்து குடும்பச் சூழலைச் சமாளிக்கக் கடன்கள் வாங்க ஆரம்பிக்கிறார். அது மலை போல் வளர, அடுத்தடுத்து அவர் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையும் எமோஷனும் கலந்து கொடுத்திருக்கிறது இந்த `குடும்பஸ்தன்’.

குடும்பஸ்தன் படத்தில்...
குடும்பஸ்தன் படத்தில்…

குடும்ப பொறுப்பைச் சுமக்கும் இடத்தில் திண்டாட்டம், மாமாவிடம் தோற்கக் கூடாது என்கிற இடத்தில் தன்மானம், காதல் மனைவியிடம் ரொமான்ஸ் எனப் புதிதாகத் திருமண வாழ்வுக்கு வந்த இளைஞனைக் கண்முன் நிறுத்துகிறார் மணிகண்டன். குளியலறையில் தனியாகப் பேசிக் கொள்ளும் இடத்தில் சிரிப்பையும், இறுதியில் வெடித்துக் குமுறும் இடத்தில் குடும்பஸ்தனின் உணர்வுகளையும் ஆழப் பதிய வைக்கிறார். ஜீரோ பேலன்ஸ் ஹீரோவாக இருந்தாலும் தன் நடிப்பால் நம்மிடம் ‘பிளாங்க் செக்’ வாங்குகிறார் மணிகண்டன்.

போட்டித் தேர்வுக்குப் படிக்கும் நாயகி சாந்வி மேக்கஹனா, நடிப்பிலும் போட்டிப் போட்டு அதிக மதிப்பெண் எடுத்து பாஸ் ஆகிறார். அதிலும் நாயகனை அறைந்துவிட்டுப் பேசுகிற இடத்தில் தொடங்கி க்ளைமாக்ஸ் வரை அனைத்திலும் அட்டகாசமானதொரு நடிப்பு!

நக்கலான விநோத சிரிப்பு, மச்சானை எப்போதும் மட்டம் தட்டுவது, மனைவியைப் பாடாய்ப் படுத்துவது எனக் குரு சோமசுந்தரமும் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். அவரது மனைவியாக நடித்துள்ள நிவேதிதா ராஜப்பன் முதிர்ச்சியான நடிப்பை வழங்கி பாத்திரத்துக்கு வலுசேர்த்துள்ளார். அப்பாவாக ஆர்.சுந்தராஜன் போடும் ஒன்லைனர்கள் நகைப்பூட்ட, தாயாக வரும் குடசனத் கனகம் நடிப்பிலும் குறையேதுமில்லை. பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் ஆகியோர் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள்.

வைசாக் இசையில் ஷான் ரோல்டன் குரலில் வரும் ‘மானம் பறக்குது’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசையும் படத்தின் மீட்டருக்கு ஏற்ப பயணம் செய்ய வைக்கின்றன. ஒரு டிராமாவுக்குத் தகுந்த ஒளியுணர்வையும், அறைக்குள் நடக்கும் காட்சிகளில் சிறப்பான கோணங்களையும் வடிவமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் என்.சுப்பிரமணியன். ஆரம்பக் காட்சிகளில் படத்தின் வேகம் ஒரு யூடியூப் அலப்பறைகள் வீடியோ வேகத்தில் நகர்வதாகத் தோன்றினாலும், அதையே படத்தின் முதல் பாதியின் நீளத்தை மறைக்கும் பாணியாக மாற்றியிருக்கிறார் படத்தொகுப்பாளர் கண்ணன் பாலு.

குடும்பஸ்தன் படத்தில்...
குடும்பஸ்தன் படத்தில்…

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலை இயக்குநர் சுரேஷ் கல்லேரியின் உழைப்பு தெரிகிறது. அதே போல சீன உடைகள், திருமண உடைகள் ஆகிய இடங்களில் ஆடை வடிவமைப்பாளர் மீரா கவனிக்க வைக்கிறார். யதார்த்தமாக வருகிற ஒரு மோதல் காட்சியையும் தள்ளுமுள்ளு போலச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் சண்டைக்காட்சி வடிவமைப்பாளர் தினேஷ் சுப்பராயன்.

சாபத்துடன் தொடங்கி சுபத்துடன் முடியும் ஒரு வழக்கமான குடும்பக் கதையானாலும் திரைக்கதையில் அதை அலுப்பூட்டாமல் புதுமையாகக் கொடுத்திருக்கிறது பிரசன்னா பாலச்சந்திரன் – ராஜேஷ்வர் காளிசாமி எழுத்துக் கூட்டணி. சாமானியர்கள் அனைவரின் வாழ்விலும் இருக்கும் நிதிச் சிக்கல்கள், சுயமரியாதை பிரச்னைகள் ஆகியவற்றை வைத்து விளையாடியிருப்பது பார்வையாளர்களையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்கிறது. இதில் உருவக்கேலி, இரட்டை அர்த்த வசனங்கள் ஏதுமில்லாமல் யதார்த்த வசனத்தாலும் தேர்ந்த நடிப்பாலும் நகைச்சுவையைச் சாத்தியப்படுத்த முடியும் என்று நிரூபித்திருக்கிறது படக்குழு… பாராட்டுகள்!

லோன் ஆப், அக்கா கணவரால் ஏற்படும் பிரச்னை, அறுபதாம் கல்யாணம் எனத் தொடராகப் பிரிந்து ரகளை செய்யும் முதல் பாதியின் வேகம், இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் சற்றே குறைகிறது. இருப்பினும் பேக்கரி தொடங்கும் காட்சிகள், கடன்காரர்களிடம் வட்டார வழக்கை வைத்துச் செய்யும் சேட்டை என மீண்டும் கியரை மாற்றி வேகமெடுக்கிறது திரைக்கதை. எது வெற்றி, ஒரு சாமானியன் எங்கே தன்னை தொலைக்கிறான், இந்த சிஸ்டம் பணத்தின் பின்னால் எப்படி ஓட வைக்கிறது போன்ற சீரியஸான பிரச்னைகளை மிகவும் கலகலப்பான திரைமொழியில் பேசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி.

குடும்பஸ்தன் படத்தில்...
குடும்பஸ்தன் படத்தில்…

குடிகாரர் காமெடி ஜாலி கேலியாக இருந்தாலும் அதுவே ரிப்பீட் மோடில் வருவது நெருடல். அதேபோல சிஸ்டத்துக்கு வளைந்துகொடுப்பது vs சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் இருப்பது என்ற படத்தின் மைய விவாதத்துக்கு முடிவு இதுதான் என்பதை இன்னுமே தெளிவாகப் பதிய வைத்திருக்கலாம். படத்தின் தொடக்கத்தில் காதலர்களைக் குறிவைக்கும் சாதிப் பிரச்னைக்கு இரண்டாம் பாதியில் அழுத்தமான பதில் தராமல் போனதும் ஏமாற்றமே!

தேர்ந்த திரைக்கதை, சிறப்பான நடிப்பு ஆகியவற்றை வைத்து நம் நேரத்தைக் கடன் கேட்கும் இந்த `குடும்பஸ்தன்’, வட்டியுடன் அந்தக் கடனையும் அடைத்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.