புதுடெல்லி: மகா கும்பமேளாவில் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னிக்கு மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கப்பட உள்ளது. இதை அவருக்கு அளிக்கும் கின்னர் அகாடாவில் (திருங்கைகள் அகாடா) இணைந்தார் மம்தா.
சுமார் 34 வருடங்களுக்கு முன் பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருந்தவர் மம்தா குல்கர்னி (50). பல இந்தி திரைப்படங்களில் நடித்த இவருக்கு நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதன் பிறகு மெல்ல திரைப்படங்களிலிருந்து விலகியவர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டார். இடையில் 2012-ல் ஒருமுறை உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜின் கும்பமேளாவிற்கு வந்திருந்தார்.
இதையடுத்து அவருக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு எழத் துவங்கியது. இதனால், அவர் காவி உடைகள் அணியத் துவங்கினார். இத்துடன் தனது இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் அவ்வப்போது பதிவுகளையும் இட்டு வந்தார். தனது கடைசி பதிவில் அவர், தாம் 25 வருடங்களுக்கு பிறகு தாய்நாடான் இந்தியா வருவதாகவும், மும்பை அவரை வரவேற்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தாம் பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவிற்கும் சென்று முழுமையானத் துறவறம் மேற்கொள்வதாகவும் பதிவிட்டிருந்தார். இதன்படி அவர் வெள்ளிக்கிழமை (ஜன.24) மகா கும்பமேளாவின் செக்டர் 16-ல் உள்ள கின்னர் அகாடாவிற்கு வந்தார்.
அதன் தலைவரான ஆச்சார்யா லஷ்மி நாராயண் திரிபாதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் தமக்கு மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கும்படியும், முழுத்துறவறம் பூணத் தயாராவதாகவும் தெரிவித்தார். இதற்கான நிபந்தனைகளையும் ஏற்ற நடிகை மம்தா குல்கர்னி, இன்று துறவறத்திற்கு தயாராகி விட்டார். இவருக்கு ஷியாமாய் மம்தாணந்த் கிரி எனப் புதிய பெயரிடப்பட்டது.
பிறகு இறந்தபின் அவர்களது குடும்பத்தார் செய்யும் பிண்டதானச் சடங்கை அவர் தனக்குத் தானே செய்து கொண்டார். தொடர்ந்து திரிவேணி சங்கமத்தில் புனிதக் குளியலை முடித்தவருக்கு மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கும் முறைகள் துவங்கின.
இதை கின்னர் அகாடாவிற்காக ஜுனா அகாடாவின் மூத்த துறவிகள் செய்து வைத்தனர். இந்த நிகழ்வு மாலை முடிந்த பின் ருத்ராட்ச மாலைகள் அணிந்து காவி உடையில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: ‘எனக்கு காளி மாதா கட்டளையிட்டபடி எனது புதிய குருவாக கின்னர் அகாடாவின் தலைவர் லஷ்மி நாராயண் திரிபாதியை ஏற்றுள்ளேன். முழுத்துறவறம் பூண்டதால் மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கப்பட உள்ளது.
இதற்காக எனக்கிட்ட நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டேன். கடந்த 23 வருடங்களாக நான் துறவறத்தில்தான் உள்ளேன். எனது ரசிகர்கள் ஆனைவரும் என்னை பாலிவுட்டிற்கு திரும்பும்படி வலியுறுத்துகின்றனர். ஆனால், நான் இதை ஏற்கப் போவதில்லை. மகா காளி உத்தரவின்றி எதுவும் நிகழாது’ என்று தெரிவித்தார்.
தனது துறவறத்திற்கு பின் கின்னர் அகாடாவின் மத்துரா முகாமில் தங்கி இந்துமதத்தை வளர்க்கப் பிரச்சாரம் செய்ய உள்ளார் மம்தா குல்கர்னி. இதுபோல், துறவறம் மேற்கொண்ட பாலிவுட்டின் முதல் நடிகையாக மம்தா கருதப்படுகிறார்.