சேலத்தில் அறக்கட்டளை நடத்தி பொதுமக்களிடம் முதலீடு பெற்று வட்டி வழங்கியதாக எழுந்த புகாரில், அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயா பானு, ஜெயப்பிரதா, பாஸ்கர் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அறக்கட்டளை செயல்பட்டு வந்த திருமண மண்டபத்தில் இருந்து ரூ.12.50 கோடி ரொக்கம், 2.50 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் விஜயா பானு (48) என்பவர், அன்னை தெரேசா மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு அலுவலகம் அமைத்து செயல்பட்டு வந்தார். இங்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை டெபாசிட் பெறப்பட்டு, வட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அறக்கட்டளை செயல்பட்டு வந்த திருமண மண்டபத்துக்கு நேற்று முன்தினம் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, பணத்தை முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர பொருளாதார குற்றப்பிரிவு உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையிலான போலீஸார், திருமண மண்டபத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, விஜயாபானு மற்றும் அறக்கட்டளை ஊழியர்கள், பணம் முதலீடு செய்ய வந்த பொதுமக்கள் ஆகியோர், போலீஸாரை முற்றுகையிட்டு தகராறு செய்தனர்.
இது குறித்து அறிந்த மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையர்கள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையில் போலீஸார் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, விசாரணையைத் தொடர்ந்தனர். அதில், பொதுமக்களிடம் பணம் முதலீடு பெறுவதற்கான சட்டப்பூர்வ அனுமதி எதுவும் பெறாமல், மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, மண்டபத்தில் போலீஸார் சோதனை நடத்தினர்.
இதில், மண்டபத்தில் இருந்த அறைகள், ஆங்காங்கே இருந்த தொட்டிகள் என பல இடங்களில் பணம் கட்டுக்கட்டாக இருந்ததையும், தங்கக் காசுகள், வெள்ளிப்பொருட்கள், நூற்றுக்கணக்கில் அரிசி மூட்டைகள், மளிகைப் பொருள் பொட்டலங்கள் என பலவும் இருந்தன. அதில் ரொக்கமாக ரூ.12.50 கோடி, தங்கம் 2.50 கிலோ, வெள்ளி 15 கிலோ ஆகியவை இருந்தன. இவற்றைப் பறிமுதல் செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறக்கட்டளை தலைவர் விஜயபானு, துணைத்தலைவர் ஜெயப்பிரதா, நிர்வாகி பாஸ்கர் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இதேபோல், போலீஸாரை தாக்கிய வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
முதல்கட்ட விசாரணை குறித்து போலீஸார் கூறியதாவது: வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த தாரபடவேடு கிராமத்தைச் சேர்ந்த விஜயா பானு (48). இவர், வேலூர் மாநகராட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தவர், எனினும், அவர் தற்போது பாஜக-வில் இல்லை. விஜயா பானு, கடந்த 2 ஆண்டுகளாக சேலத்தில் வசித்து வந்தார். இந்த அறக்கட்டளை நிறுவனத்தில் துணைத் தலைவராக சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஜெயப்பிரதா (47), அம்மாபேட்டையைச் சேர்ந்த பாஸ்கர் (49) உள்ளிட்டோரும் நிர்வாகிகளாக செயல்பட்டு வந்தனர். அறக்கட்டளை மூலமாக சுயதொழில் பயிற்சி, ரூ.10-க்கு மதிய உணவு, பண்டிகை காலங்களில் ஏழைகளுக்கு இலவச உடைகள் என மக்களை கவரும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன.
மேலும், ரூ.5 ஆயிரம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ. 1,000 வீதமும், 7 மாதத்துக்குப் பின்னர் முதலீடு செய்த தொகை திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை மக்களிடம் முதலீடாகப் பெற்றுள்ளனர். மேலும், தவணை முறையில் வீட்டு மனை, நகை சீட்டு என திட்டங்களும் நடத்தப்பட்டதாக தெரிகிறது. முதலீடு செய்பவர்களுக்கு, முதலீட்டுத் தொகைக்கு ஏற்ப தங்கக் காசு, வெள்ளிக் காசு, அரிசி மூட்டை, மளிகைப் பொருள் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், முதலீட்டு திட்டத்தில் புதியவரை சேர்ப்பவர்களுக்கு கமிஷன் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது. கவர்ச்சிகரமான இத்திட்டங்களால், சேலத்தில் அம்மாப்பேட்டை, பொன்னம்மாபேட்டை, வாய்க்கால் பட்டறை உள்பட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், ஆத்தூர், வாழப்பாடி மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். எனினும், பணம் முதலீடு செய்தவர்களுக்கு, உரிய ரசீது ஏதும் வழங்கப்படவில்லை. பலருக்கும், மாதாந்திர உதவி பெறுபவர் என்ற அட்டையும், அறக்கட்டளை உறுப்பினர் என்ற அட்டையுமே வழங்கப்பட்டுள்ளது, என்றனர்.
இதனிடையே, முதலீடு செய்திருந்த மக்கள், திரண்டு வந்ததைத் தொடர்ந்து, அறக்கட்டளை செயல்பட்டு வந்த மண்டபத்துக்கு போலீஸார் ‘சீல்’ வைத்ததுடன், அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அன்னை தெரேசா அறக்கட்டளை தொடர்பான புகார்கள் அம்மாபேட்டை காவல்நிலையத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் என மண்டபத்தில் சுவர்களில் போலீஸார் துண்டுப் பிரசுரங்களை ஒட்டி வைத்துள்ளனர்.
இந்நிலையில், அறக்கட்டளை செயல்பட்ட மண்டபத்துக்கு வந்த முதலீட்டாளர்கள் கூறுகையில், ‘நாங்கள் செலுத்திய பணத்துக்கு உரிய ரசீது கொடுக்கவில்லை. ஆனால், அறக்கட்டளை சார்பில் உரிய வட்டி கொடுத்து வந்தனர். அவர்கள் எங்களை ஏமாற்றவில்லை’ என்றனர்.
இதனிடையே, அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில், நேற்று மதியம் வரை 11 பேர் மொத்தம் ரூ.30 லட்சம் முதலீடு செய்துள்ளதாக புகார் அளித்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அறக்கட்டளை பெயரில் முதலீடு பெறப்பட்டுள்ளதால், பல கோடி ரூபாய் மக்களிடம் முதலீடாக பெறப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. கைது செய்யப்பட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயா பானு, ஜெயப்பிரதா, பாஸ்கர் ஆகியோரை, கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.