ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் நடந்த ஒரு மதநிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா பக்தர்களுடன் சேர்ந்து காவித் துண்டு அணிந்து இந்தி பஜனைப் பாடலைப் பாடினார்.
அன்னை வைஷ்ணோ தேவி கோயில் யாத்திரைக்கான அடிப்படை முகாமில் வியாழக்கிழமை நடந்த நிகழ்வின் போது பரூக் அப்துல்லா,இந்தி பஜனைப் பாடலை பாடினார். 87 வயதான தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஆஸ்ரமத்தின் உள்ளே அமர்ந்திருந்த போது, பஜனைப் பாடல் பாடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் பரூக்கிடம் மைக்கைக் கொடுத்தார். மைக்கைக் கொடுத்த நபர், குறிப்பிட்ட ஒரு பஜனைப் பாடலின் முதல் வரியைப் பாட, பரூக் அப்துல்லா, மீதி வரிகளைப் பாடினார். அப்போது அன்னை வைஷ்ணோ தேவி பக்தர்கள் அணிவதுபோல் காவித் துண்டு ஒன்றையும் அவர் அணிந்திருந்தார்.
இதனிடையே, நகரில் ரோப்வே திட்டம் செயல்படுத்தபடுவதற்கு எதிராக போராடிவரும் மக்களுக்கு பரூக் அப்துல்லா தனது ஆதரவினை தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “கோயில் நிர்வாகத்தினர் மக்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் திட்டங்களை தவிர்க்க வேண்டும்.
அதிகாரம் அரசிடம் இல்லை, அது மக்களிடம் தான் உள்ளது என்பதை அவர்கள் இப்போது உணர்ந்திருப்பர். இந்த மலைப்பகுதியில் வாழும் மக்கள் தங்களின் வாழ்க்கைக்காக அன்னை வைஷ்ணவி தேவி ஆசியை நாடியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளனர்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் தாங்கள் வெல்லமுடியாதவர் என்று நம்புகின்றனர். தெய்வீக சக்தி உயரும் போது மற்றவைக் குறைந்து விடும். கலிபோர்னியாவில் என்ன நடந்தது என்று பாருங்கள். அனைத்து மதங்களின் அடிப்படை நோக்கம் ஒன்றே ஒன்றுதான். ஆனால் சுயநலம் கொண்டவர்களால் சுரண்டப்படுகிறது.” இவ்வாறு தெரிவித்தார்.