மதுரை: “டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி அனைத்துக் கட்சிகளும் போராடியுள்ளது. இதனால் டங்ஸ்டன் திட்டம் ரத்தானதை அரசியலாக்க விரும்பவில்லை” என பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கூறினார்.
மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரி மக்கள் கடந்த 3 மாதங்களாக போராடி வந்தனர். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மத்திய அமைச்சரவை நேரில் சந்தித்து வலியுறுத்த தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் தலைமையில் 11 பேர் குழு டெல்லிக்கு சென்றது. டெல்லியில் இக்குழு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மத்திய கனிமவளத் துறை அமைச்சர் கிஷன்ரெட்டியை நேரில் சந்தித்து டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மனு அளித்தது. இதையடுத்து டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை மேலூர் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிலையில், மதுரையிலிருந்து டெல்லி சென்ற ராம.சீனிவாசன் தலைமையிலான குழு இன்று காலை விமானத்தில் மதுரை திரும்பியது. குழுவினரை மேலூர், அரிட்டாபட்டி வள்ளாலபட்டி, கிடாரிப்பட்டி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கியும், பரிவட்டம் கட்டியும் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராம.சீனிவாசன் கூறியது: ”டங்ஸ்டன் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏல உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவை அனைவரும் வரவேற்றுள்ளனர். டங்ஸ்டன் அரிய வகை தாதுப் பொருள். அதை தற்போது வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் டங்ஸ்டன் இருப்பதால்தான் தமிழக அரசின் ஒப்புதலுடன் ஏலம் விட முடிவு செய்தபோது, அதற்கு தமிழக அரசு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
விவசாயிகளை சந்தித்து பேசிய போது தான் டங்ஸ்டன் சுரங்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் எங்களுக்கு தெரியவந்தது. மக்கள் தெரிவித்த கருத்துகளை ஏற்றுக்கொண்டு சுரங்க திட்டத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. டங்ஸ்டன் போராட்டத்தை திசை திருப்ப முயற்சிகள் நடந்தது. இருப்பினும் மக்கள் உறுதியுடன் போராடினர். விரைவில் அரிட்டாபட்டிக்கு வருமாறு மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அரிட்டாபட்டிக்கு வருவதாக உறுதியளித்துள்ளார்.
திட்டம் ரத்தாக முயற்சித்து பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோருக்கும், திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கும் நன்றி கூறுகிறோம். தமிழக அரசின் நடவடிக்கைக்கு பணிந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தை அரசியலாக பார்க்கவில்லை. அரசியலாக்கவும் விரும்பவில்லை. அனைத்துக் கட்சியினருமே போராடியுள்ளனர். திட்டம் குறித்து ஆயிரம் பேர் பேசியிருக்கலாம். ஆதரவாக இருப்பது போல் நடித்தும் இருக்கலாம். ஆனால் உண்மையில் உடனிருந்து மக்கள் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தது பிரதமர் மோடிதான்” என்று அவர் கூறினார்.
போராட்டக் குழுவைச் சேர்ந்த வள்ளாலப்பட்டி மகாமுனி கூறுகையில், “மேலூர் மக்கள் 2 மாதமாக கவலையில் இருந்தனர். லட்சக்கணக்கான மக்கள் மேலூரிலிருந்து மதுரைக்கு நடைபயணமாக வந்த தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதன் விளைவாக திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி சந்திப்பின் போது திட்டம் ரத்து செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும் எழுத்துபூர்வமாக உத்தரவு பிறப்பித்தால் தான் ஊருக்கு செல்வோம் எனக் கூறினோம்.
பிரதமரிடம் பேசிவிட்டு தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் கூறினார். அதன் பிறகு திட்டத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தமிழக பாஜகவினருக்கு கிராம மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்” என்றார்.
போராட்டக் குழுவைச் சேர்ந்த ஆனந்த் கூறுகையில், ”சுரங்க திட்டத்தை கைவிடக் கோரி 2 மாதங்களாக போராடி வந்தோம். டங்ஸ்டன் சுரங்கம் வராது என தமிழக அமைச்சர் மூர்த்தி நம்பிக்கையை கொடுத்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உறுதி கொடுத்தார். திட்டம் ரத்தானது மகிழ்ச்சி” என்றார்.