வாஷிங்டன்: அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
முன்னதாக, கடந்த 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக திங்கள்கிழமை பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உடனடியாக பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதில், “பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்படுகிறது. அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும். இந்த உத்தரவு 30 நாட்களில் நடைமுறைக்கு வரும். அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களின் குழந்தைகள் அமெரிக்காவின் ‘அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள்’ அல்ல என்பதால், குடியுரிமை சட்டத்தின் 14-வது திருத்தத்தில் வழங்கப்பட்ட அரசியலமைப்பு உத்தரவாதம் அவர்களுக்கு பொருந்தாது” என்று பிறப்பித்த உத்தரவு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
‘அரசியல் சாசனத்துக்கு விரோதமானது..’ இதனை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சியாட்டல் மாகாண நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜான் கோக்னார், “ட்ரம்ப்பின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.” எனக் கூறி அந்த உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்தார். இதன் மூலம் ட்ரம்ப் உத்தரவு அமலாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் ட்ரம்ப்பிடம் தடை உத்தரவு குறித்து தெரிவிக்கப்பட்டபோது, ‘நிச்சயம் மேல்முறையீடு செய்வோம்.’ என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு பாதிப்பு: இந்தியாவைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் ஹெச்1-பி (H-1B) விசா மூலம் அமெரிக்கா சென்று அங்கு பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வரும் நிலையில் ட்ரம்ப்பின் இந்த உத்தரவு அவர்களுக்கு மிகப் பெரிய கவலையை அளித்துள்ளது. வேலை விசாக்கள் அல்லது சுற்றுலா விசாக்கள் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இனி இயல்பாக குடியுரிமை பெற மாட்டார்கள் என்பதால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர். அதோடு, தற்காலிக விசாக்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை ஆண்டுதோறும் வேலைக்கு அமர்த்தும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இது தொடர்பான விவாதம் அமெரிக்கா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்த உத்தரவுக்கு இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிசேரியனுக்கு ஆர்வம் காட்டும் கர்ப்பிணிகள்.. இதற்கிடையில், பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை ரத்து ஒரு மாத காலத்துக்குள் அமலுக்கு வரும் என்பதால், அதற்குள் குழந்தையை சிசேரியன் மூலமாவது பெற்றுக் கொள்ள நிறைமாத கர்ப்பிணிகள் பலர் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இருப்பினும் அமெரிக்காவில் சிசேரியன் அறுவை அவ்வளவு எளிதாக நடைபெறுவதில்லை என்பதால் அதனை சட்டபூர்வமாக எப்படி செய்து கொள்வது என்றும் கர்ப்பிணிகள் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.