பாங்காக்,
ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு தாய்லாந்து அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து, இந்தச் சட்டம் நேற்று முதல் (ஜன.23) அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் தன்பாலின திருமணத்துக்கு தாய்லாந்தின் செனட் சபை ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து அந்த மசோதா, மன்னர் மகா வஜிரலங்கோனின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டது. அதன்பின், தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் முதல் தென்கிழக்காசிய நாடு என்ற பெருமையைத் தாய்லாந்து பெற்றுள்ளது. தன் பாலினத் திருமணத்தை ஏற்கும் மூன்றாவது ஆசிய நாடு தாய்லாந்து ஆகும். தைவானும் நேபாளமும் ஏற்கெனவே அத்தகைய திருமணங்களை அங்கீகரித்து வருகின்றன.
இந்தநிலையில் தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமண சட்டம் நேற்று அமலுக்கு வந்ததையடுத்து தலைநகர் பாங்காக்கில் ஒரேநாளில் 300க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு புகைப்படத்துக்கு உற்சாகமாக போஸ் கொடுத்தனர்.
இச்சம்பவம் குறித்து, பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ரா கூறுகையில்,
இச்சட்டம் பாலியல் பாகுபாடு, இனம் அல்லது மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் அரவணைக்கிறது. அனைவருக்குமான சம உரிமை மற்றும் கண்ணியத்தை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் என்றார். இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் மூலம், தாய்லாந்தில் உள்ள ஒரே பாலின தம்பதிகள் இப்போது திருமணம் செய்து கொள்ளவும், தங்கள் சொத்துகளைப் பெறவும், குழந்தைகளைத் தத்தெடுக்கவும் சம உரிமைகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.