திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாு திருப்தியாக இல்லை என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில், தமிழக சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் பாஜக, இந்து முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், அங்குள்ள மச்சமுனி தீர்த்த நீரை எடுத்து வந்த இந்து முன்னணியினர், சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனியுடன் வந்தவர்கள் மலைப்படிகளில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்ட இடத்தில் தீர்த்தத்தை தெளித்து தூய்மைப்படுத்தினர். பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அறநிலையத் துறை அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. இதனால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். மலை மீதுள்ள குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளின் உணவு, குடிநீர் தேவையை நிறைவேற்ற வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் முன்புபோலவே வழிபாடு செய்ய வேண்டும். இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது” என்றார்.
பின்னர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறும்போது, “திருப்பரங்குன்றம் கந்தன் மலையை, சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிக்கி்ன்றனர். ஆடு, கோழி, மாடு பலி கொடுப்பதாகக் கூறி, மதப் பிரச்சினையை உருவாக்க முயல்கின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை. இதைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் பிப். 4-ம் தேதி திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.