மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் தமிழ்நாடு சட்டமன்ற பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய மலைப்பாதை வழியாக சென்றனர்.
அவருடன் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர் சென்றனர். பின்னர் காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்தனர். பின்னர் அங்குள்ள மச்சமுனி தீர்த்தத்திற்கு சென்று தீர்த்த நீரை எடுத்து வந்த இந்து முன்னணியினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி உடன் வந்தவர்கள் மலைப்படிகளில் அமர்ந்து அசைவ பிரியாணி சாப்பிட்ட இடத்தில் மச்சமுனி தீர்த்தத்தை தெளித்து தூய்மைப்படுத்தினர்.
தமிழ்நாடு சட்டமன்ற பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு இந்துசமய அறநிலையத்துறை அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. இதனால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். மலை மீதுள்ள குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தேவையை இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை இணைந்து நிறைவேற்ற வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் முன்பு இருந்ததைப் போல வழிபாடு செய்ய வேண்டும். தேவையில்லாமல் இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது” என்றார்.
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறுகையில், “திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்றுவர முறையான பாதை வசதி இல்லை. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோயிலுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். திருப்பரங்குன்றம் மலை கந்தன் மலை என வரலாற்று ஆவணங்கள் இருக்கும்போது சிக்கந்தர் மலை என பெயர் மாற்ற முயற்சிக்கி்ன்றனர்.
ஆடு, கோழி, மாடு கூட பலி கொடுப்பதாகக் கூறி தேவையற்ற மதப்பிரச்சினையை உருவாக்க முனைகின்றனர். எனவே தமிழக அரசு தலையிட்டு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் செயல்பாட்டில் திருப்தி இல்லை. இதனை கண்டித்து இந்து முன்னணி சார்பில் பிப்.4-ம் தேதி திருப்பரங்குன்றத்தில் அறப்போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.