புதுடெல்லி: தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று, பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், அவர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் அரசு தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று, பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளித்து, அவர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். அனைத்து துறைகளிலும் பெண் குழந்தைகள் ஏற்படுத்தும் சாதனைகள் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. அவர்களின் சாதனைகள் தொடர்ந்து நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கின்றன.
பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் பங்களித்த கல்வி, தொழில்நுட்பம், திறன்கள், சுகாதாரம் போன்ற துறைகளில் எங்கள் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பெண் குழந்தைக்கு எதிராக எந்த பாகுபாடும் நடக்காமல் பார்த்துக் கொள்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சமத்துவமின்மைக்கு எதிரான நமது நிலைப்பாட்டை புதுப்பிப்பதற்கும், நமது மகள்களுக்கு சம உரிமைகள், வாய்ப்புகள் மற்றும் தரமான கல்வியை வழங்குவதற்கு உழைப்பதற்கும் இது ஒரு நாள்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் போன்ற மைல்கல் முயற்சிகள் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் சிறந்த நாளை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளன” என தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வலிமை, தைரியம் மற்றும் அர்ப்பணிப்பின் சின்னம் மகள்கள். அவர்கள் தங்களுக்கான சிறந்த நாள் மீது நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களுடன் உள்ளார்கள். அவர்களுக்கு ஒரு பிரகாசமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவது நமது பொறுப்பு. மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் அவர்களுக்கு முழு உரிமைகளை வழங்க உறுதி எடுப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தேசிய பெண் குழந்தைகள் தினம், நமது நாட்டின் மகள்களைக் கொண்டாடவும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் நினைவூட்டுகிறது. அவர்களுக்கு சம வாய்ப்புகளை உறுதி செய்வோம். ஒவ்வொரு பெண்ணும் கனவு காணவும், சாதிக்கவும், செழிக்கவும் கூடிய ஒரு உலகத்தை உருவாக்குவோம். பாலின சமத்துவத்திற்கான எங்கள் போராட்டத்தில் எங்களுடன் இணையுங்கள்; பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குங்கள்” என தெரிவித்துள்ளது.