பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்

சண்டிகர்,

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 – 2025 கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். தற்போது போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த போட்டி தொடரில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம், பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே போட்டி நடந்தது. அப்போது, பீகார் வீராங்கனை ஒருவரின் பவுல் பிளே தொடர்பாக தமிழக வீராங்கனை நடுவரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தமிழக வீராங்கனை மற்றும் நடுவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வாக்கு வாதத்தின் போது நடுவர் தமிழக வீராங்கனையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிற தமிழக வீராங்கனைகள் வாக்குவாதம் செய்ய, நடுவருக்கு ஆதரவாக பீகார் தர்பங்கா பல்கலை., மாணவிகள் வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக உருவாகவே, அங்கு பீகார் – தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு சூழல் உண்டாகியது. இதனால் தற்காலிகமாக போட்டி நிறுத்தப்பட்டு, தமிழ்நாடு அதிகாரிகள் பஞ்சாப் நிர்வாகம் மற்றும் போட்டி நடத்தும் அதிகாரிகளிடம் விசாரித்து வருகின்றனர். கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.