பாட்டல் ராதா விமர்சனம்: குடிநோயை முதிர்ச்சியுடன் அணுகியிருக்கும் கதைக்களம்; ரசிக்க வைக்கிறதா?

‘பாட்டல் ராதா’ என்ற சாமானியர் எப்படி மீண்டும் ‘ராதா மணியாக’ மாறுகிறார் என்ற பயணத்தைப் பேசுகிறது ‘பாட்டல் ராதா’.

சென்னையைச் சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளரான பாட்டல் ராதா என்கிற ராதா மணி (குரு சோமசுந்தரம்), தன் மனைவி (சஞ்சனா நடராஜன்) மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். வீடு, பொது இடம், பணியிடம் என எல்லா இடத்திலும் மதுவும், மது போதையுமாகவே உலா வருகிறார் ராதா. இந்த தொடர் குடிப்பழக்கத்தால் அவரது வேலை, குடும்ப சந்தோஷம், பொருளாதாரம் போன்றவைப் பாதிப்பிற்குள்ளாகின்றன. இவற்றால் பொறுமையிழக்கும் அவரது மனைவி, அவரைப் போதை மறுவாழ்வு மையத்தில் பிடித்துக்கொடுக்கிறார்.

பாட்டல் ராதா விமர்சனம்
பாட்டல் ராதா விமர்சனம்

அசோக் (ஜான் விஜய்) என்பவர் நடத்தும் அந்த போதை மறுவாழ்வு மையத்தின் சூழலும், அதன் மனிதர்களும் ராதாவை எப்படி மாற்றுகின்றன, குடிப்பழக்கத்திலிருந்து ராதா மீண்டாரா, தன் குடும்பத்துடன் சேர்ந்தாரா போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கத்தின் ‘பாட்டல் ராதா’.

தொடர் போதையால் குழைந்து போன உடல்மொழி, குடும்பத்தின் மீதான பாசம், கெத்தைக் காட்டச் செய்யும் போலி ரவுடிஸம் எனத் தன் நடிப்பால் முழு பாட்டலையும் நிறைத்திருக்கிறார் குரு சோமசுந்தரம். அதேநேரம், சில இடங்களில் மீட்டர் எகிறி, ஓவர் டோஸ் நடிப்பும் எட்டிப் பார்க்கவே செய்கிறது. குடும்பத்தையும், பொல்லாத சுற்றத்தையும் சமாளித்து, தன் கணவனை நல்வழிப்படுத்தப் போராடும் பெண் கதாபாத்திரத்திற்கு ரத்தமும் சதையுமாக உயிர்கொடுத்திருக்கிறார் சஞ்சனா நடராஜன். இறுதிக்காட்சியில் மேடையில் பேசும் இடம் க்ளாஸ்! சிறிது சிறிதாக ஆழமாகும் அசோகன் கதாபாத்திரத்தின் இயல்பை உணர்ந்து, அதற்குத் தன் நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஜான் விஜய். கிடைக்கும் இடங்களிலெல்லாம் சிரிப்பைப் பொங்க வைக்கிறார் மாறன். பாரி இளவழகன், ஆண்டனி ஆகியோர் நடிப்பில் குறையேதுமில்லை.

பாட்டல் ராதா விமர்சனம்
பாட்டல் ராதா விமர்சனம்

இரவுநேரக் காட்சிகளிலும், மறுவாழ்வு மையத்தில் நடக்கும் காட்சிகளிலும் ரூபேஷ் ஷாஜியின் ஒளிப்பதிவு பலம் சேர்த்திருக்கிறது. இ.சங்கத்தமிழனின் படத்தொகுப்பு தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறது. ஷான் ரோல்டன் இசையில், ‘யோவ் பாட்டலு’ பாடல் மட்டும் படத்தின் வேகத்தைக் குறைக்க, ஏனைய பாடல்கள் கதையோட்டத்தோடு வந்து வலுசேர்க்கின்றன. பின்னணி இசையால் வலிகளுக்கும், சந்தோஷங்களுக்கும் கனம் கூட்டியிருக்கிறார் ஷான் ரோல்டன். மறுவாழ்வு மையம், ஏரியோர வீடு, டாஸ்மாக் என அவ்வுலகத்தைக் கட்டமைக்க பெரும் உழைப்பைப் போட்டிருக்கிறார் கலை இயக்குநர்.

போதைக்கு அடிமையானவர்களைப் புறந்தள்ளாமல், அதை ஒரு நோயாக அணுகி, அவர்களின் குடும்பங்கள் அனுபவிக்கும் புறக்கணிப்புகளையும், இன்னல்களையும் பேச முயன்றிருக்கிறார் இயக்குநர் தினகரன் சிவலிங்கம். கதாநாயகன் அறிமுகம், குடும்பச் சூழல் என உண்மைக்கு மிக நெருக்கமான உலகைக் காட்டத் தொடங்கும் படம், மறுவாழ்வு மையத்திற்குள் நுழைந்தவுடன் சுவாரஸ்யத்தோடு கலகலப்பையும் கொண்டு வருகிறது. வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த மனிதர்களைக் கொண்ட மையத்தில் நடக்கும் காட்சிகளும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் படத்தின் மையக்கருவிற்குப் பலம் சேர்க்கின்றன.

பாட்டல் ராதா விமர்சனம்
பாட்டல் ராதா விமர்சனம்

இரண்டாம் பாதியின் தொடக்கம் கதைப் பொருளை நோக்கி நகர்ந்தாலும், சிறிது நேரத்திலேயே திரைக்கதை ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடுகிறது. டாஸ்மாக், குடி, வீடு என மீண்டும் மீண்டும் அதே காட்சிகள் ரிப்பீட் அடிப்பது அயர்ச்சியைத் தருகின்றன. அதனால், ராதா கதாபாத்திரத்தின் மனமாற்றத்திலிருந்து பார்வையாளர்கள் விலக நேர்கிறது. அதோடு ராதா – அசோக் உரையாடல், பின்கதையில் வரும் காதல் காட்சிகள் போன்றவைக் கச்சிதமாக எழுதப்பட்டிருந்தாலும், முழுமையான தாக்கத்தைத் தராமல் போகின்றன. இறுதிக்காட்சிக்கு முந்தைய எமோஷனல் காட்சிகள் நடிகர்களின் நடிப்பால் க்ளிக் ஆகியிருக்கின்றன.

குடிக்கு அடிமையாவதைத் தனிமனிதப் பிரச்னையாகச் சுருக்காமல், சமூகப் பிரச்னையாக அணுகி, அதிலுள்ள சிக்கல்களையும், அரசின் மீதான கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது படம். அதேநேரம், தொழிலாளர்கள் மீது சுமத்தப்படும் அதீத உடலுழைப்பையும் அதனால் அவர்கள் அதீத குடிப்பழக்கத்திற்குத் தள்ளப்படுவதையும் சேர்த்தே சுட்டிக்காட்டியிருக்கலாம்.

பாட்டல் ராதா விமர்சனம்
பாட்டல் ராதா விமர்சனம்

கருத்தாகவும், உணர்வுபூர்வமாகவும் கவர்ந்தாலும், இரண்டாம் பாதியிலுள்ள சறுக்கலைச் சரிக்கட்டியிருந்தால், இன்னும் நெருக்கமாகியிருப்பார் இந்த ‘பாட்டல் ராதா’.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.