“பிரபாகரனை சீமான் இழிவுபடுத்துகிறார்; சனாதன கும்பலுக்கு பாதை அமைத்து கொடுக்கிறார்'' -திருமாவளவன்

சமீப நாள்களாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தந்தை பெரியார் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை பேசி வருகிறார்.

இதற்கு பெரியாரிய இயக்கங்கள், திமுக தலைவர்கள் தங்கள் எதிர்ப்புகளை கடுமையாக பதிவு செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் கொள்கை தலைவராக பார்க்கப்படும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனோடு சீமான் இருக்கும் புகைப்படம் போலி என்று பதிவிட்டு வருகின்றனர். இப்படி பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள் சீமான் மீது இருக்கும் நிலையில் , சீமான் பற்றியும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றியும் விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருக்கிறார்.

சீமான்
சீமான்

இதுதொடர்பாக பேசிய அவர், “சீமான் பேசுவது குதர்க்கமானது. அதற்கு பதில் சொல்ல முடியாது. அதில் கேள்வி எழுப்பக்கூட முடியாது. சீமான் வெறும் கவன ஈர்ப்புக்காக மட்டுமே பேசுகிறார். தன்னை பற்றி எல்லோரும் பேச வேண்டும் என பேசி வருகிறார். சீமான் பேசுவது சனாதன கும்பலுக்கு பாதை அமைத்து கொடுத்து விடும். சீமானுக்கு அது பயன்படுகிறதோ இல்லையோ, தமிழ் மண்ணில் சனாதன கும்பல் அரசியல் செய்ய பாதை அமைத்துக் கொடுத்துவிடும்.

இதனை சீமான் அறிந்து செய்கிறாரா? அறியாமல் செய்கிறாரா? என தெரியவில்லை. சீமான் தமிழ் தேசியம் பேசுவது இங்கு பிரச்சனை இல்லை. ஆனால் அது மதவாத சக்திகளுக்கு இங்கே அடித்தளம் அமைத்து கொடுத்துவிடும் பாதை என்பது தான் பிரச்சனை. தந்தை பெரியாரின் தியாகம் என்பது ஒப்புயர் அற்றது. நான் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சென்னையிலும் சந்தித்து இருக்கிறேன்.

திருமாவளவன்
திருமாவளவன்

இலங்கையிலும் 2 முறை சந்தித்து இருக்கிறேன். சில நிமிடங்கள் அல்ல மணி கணக்கில் தனிமையில் அமர்ந்து பேசியிருக்கிறேன். அவர் தமிழ்நாடு அரசியலை பற்றி விரிவாக பேசி இருக்கிறார். ஒரு போதும் அவர் திராவிட இயக்கங்களை பற்றியோ, பெரியாரை பற்றியோ குறை சொன்னதில்லை. சீமான் பேசுவது பிரபாகரன் அவர்களை இழிவுபடுத்துவது போல் இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.