பிரயாக்ராஜ்: பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பத்திரிகையாளர்களை விட அதிக எண்ணிக்கையில் யூடியூபர்கள் கேமராக்களுடன் வலம் வருகின்றனர். பெரும்பாலும் உள்ளூரை சேர்ந்த இவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இவர்களும் பல்வேறு பாபாக்களை பேட்டி எடுத்து தங்கள் சந்தாதாரர்களை கூட்ட யூடியூப் சேனல்களில் வைரலாக்குகின்றனர்.
இந்நிலையில் இந்த யூடியூபர்களில் 4 பேர் நேற்று முன்தினம், இடுக்கி பாபாவின் தாக்குதலுக்கு ஆளாகினர். ஜுனா அகாடாவை சேர்ந்த இந்த துறவி, பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்ய தான் வைத்திருக்கும் இடுக்கியை பயன்படுத்துவார். இதனால் இவருக்கு இடுக்கி பாபா என்ற பெயர் ஏற்பட்டது. இவர் தனது இடது கையை எந்நேரமும் மேலே உயர்த்தியபடி இருப்பார். வலது கையை மட்டும் 24 மணி நேரமும் பயன்படுத்துவதால் அவரது காட்சிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.
இந்நிலையில் இடுக்கி பாபாவை பேட்டி எடுக்க வந்த யூடியூபர் ஒருவர் ஏடாகூடமாக கேள்வி எழுப்ப, அது பாபாவுக்கு கோபத்தை உண்டாக்கியது. இதனால் அடுத்த வினாடியே அவரை தாக்கத் தொடங்கினார் பாபா. இதனால் அங்கிருந்து தப்பி ஓடினார் அந்த யூடியூபர்.
சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு யூடியூபர் தன்னுடன் பொதுமக்களில் ஒருவரை அழைத்து வந்து இடுக்கி பாபாவிடம் கேள்வி கேட்கும்படி கூறினார். அவரை தனது கால்களாலும் ஓட ஓட விரட்டினார் இடுக்கி பாபா.
இதுபோல் தன்னை அணுகிய மற்றொரு யூடியூபரை இரும்பு இடுக்கியால் தாக்கினார் பாபா. இன்னொரு யூடியூபரிடம் இருந்து மைக்கை பறித்த பாபா, “இவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்” என்று கூச்சலிட்டார். பிறகு அவரையும் தாக்கத் தொடங்கினார். இவரும் பாபாவிடம் இருந்து தப்பியோடினார்.
பேட்டி எடுப்பவர்கள் மீது இதுபோன்ற தாக்குதலை முள் பாபா என்ற துறவிதான் தொடங்கி வைத்தார். முள் படுக்கையில் படுத்திருக்கும் அவரிடம், “இந்த முள் உண்மையானதா?” என உள்ளூர் சேனல் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த பாபா, “வா மகனே, இதில் படுத்துப்பார் தெரியும்” என்று நிருபரின் கன்னத்தில் அறைந்து சட்டையை பிடித்து இழுத்தார். தலைதெறிக்க ஓடிய அந்த நிருபர், தான் தாக்கப்பட்டதையும் செய்தியாக்கி வைரலாக்கினார். இதன் விளைவாக இப்போது பாபாக்களில் பலரும் யூடியூபர்கள் மீது தாக்குதலை தொடங்கி விட்டனர்.