முதல் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தார்கள் – ஜோப்ரா ஆர்ச்சர்

கொல்கத்தா,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்று வரும் டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி நாளை சென்னையில் நடக்கிறது.

இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தார்கள் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

மற்ற பவுலர்களை காட்டிலும் முதல் போட்டியில் சூழ்நிலைகள் எனக்கு கொஞ்சம் சாதகமாக இருந்தது என்று நினைக்கிறேன். மற்ற பவுலர்களும் நன்றாக பவுலிங் செய்தார்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தார்கள். சில பந்துகள் இல்லை, நிறைய பந்துகள் காற்றில் சென்றன. ஆனால், அது கைகளில் விழவில்லை.

எனவே அடுத்த போட்டியில் அவை அனைத்தும் கைகளுக்கு சென்று இந்தியா 40/6 என தடுமாறும் என்று நம்புகிறேன். ஆரம்பத்தில் நீங்கள் எப்போதும் வெற்றிக்காக முயற்சி செய்வீர்கள். ஏனெனில் ஆரம்பத்திலேயே உங்களுக்கு 3 – 4 விக்கெட்டுகள் விழுந்தால் வாய்ப்பு கிடைக்கும். மிடில் ஆர்டரில் எதிரணிகள் கொஞ்சம் வித்தியாசமாக மெதுவாகவே விளையாடுவார்கள்.

எனவே விக்கெட்டுகள் எடுப்பது தான் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்றால் அதை நீங்கள் முயற்சிக்க வேண்டும். அதை நாங்களும் முதல் போட்டியில் முயற்சி செய்தோம். ஆனால் அது வேலை செய்யவில்லை. எனவே இரண்டாவது போட்டியில் அதை நாங்கள் மீண்டும் முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.