ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை இரட்டிப்பு – தேர்தலைக் குறிவைத்து திமுக அரசின் பலே பிளான்?

ரேஷன் கடை ஊழியர்களுக்கு இந்தாண்டுக்கான விடுமுறை தினங்களை அதிகப்படுத்தி உத்தரவிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையை தற்போது திருத்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை நாட்களை முந்தைய ஆண்டின் டிசம்பர் மாதம் அறிவிக்கும் அரசு.

அரசு அலுவலகங்கள், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் இந்த விடுமுறை தினங்களில் இயங்காது. அதேநேரம் ரேஷன் ஊழியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. ஏனெனில் இவர்கள் அத்தியாவசிய சேவையின் கீழ் வருவதால் இவர்களுக்கான விடுமுறை தினங்கள் குறித்த விபரம் உணவு வழங்கல் துறையால் தனியாக அறிவிக்கப்படும்.

அதேபோல் 2025ம் ஆண்டுக்கான ரேஷன் கடைகளுக்கான விடுமுறை தினங்கள் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் அறிவிக்கப்பட்டன. அதன்படி பொங்கல், குடியரசுதினம், தைப்பூசம் உள்ளிட்ட மொத்தம் 11 நாட்களை விடுமுறை நாட்களாக அறிவித்திருந்தார்கள்.

முதலில் வெளியான விடுமுறை நாட்கள்

ஆனால் இன்று திருத்தப்பட்ட அரசாணை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆணையில் மொத்தம் 23 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலப்புத்தாண்டு, திருவள்ளுவர் தினம், பக்ரீத், மொஹரம், தெலுங்கு வருடப்பிறப்பு, மகாவீரர் ஜெயந்தி, புனித வெள்ளி என கூடுதலாக 12 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரேஷன் பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம்.

‘’பொதுவாகவே ஒவ்வொரு வருஷமும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை தினங்கள் ரொம்பக் கம்மியா இருக்கும். அத்தியாவசியத் துறைங்கிறதால் நாங்களும் இதை ஏத்துகிட்டு வேலை செய்துட்டு வர்றோம். பொங்கல் பண்டிகையின் போதெல்லாம் பொங்கல் தொகுப்பு , வேட்டி சேலை தர்றதால் பொங்கலுக்கு முந்தைய போகி அன்னைக்கு ராத்திரி 7 மணி வரை எங்களுக்கு வேலை இருக்கும்.

தொகுப்பு வழங்கும் பணி என்பதால் ஒவ்வொரு வருஷமும் ஜனவரி ஆரம்பிச்சதுமே முதல் இரண்டு வெள்ளிக்கிழமை விடுமுறைகளும் இருக்காது. அதாவது தொடர்ந்து இரண்டு வாரம் வேலை நாட்களாகவே இருக்கும். தொகுப்புக்கு ஒரு கார்டுக்கு 59 காசு தர்றாங்க. இந்தத் தொகையைக் கூட்டித் தரலாம். குறைந்தது ஒரு கார்டுக்கு ஒரு ரூபாய் தரலாம். ரொம்ப நாளா இந்தக் கோரிக்கை வச்சிட்டு வர்றோம். ஆனா இன்னும் சாதகமான பதில் வரலை.

ரேஷன் கடை

இந்த நிலையில் இப்ப அறிவிச்சிருக்கிற அரசாணை ஓரளவு திருப்தியா இருக்கு. ஆனா இந்த ஒரு வருஷத்துக்கு மட்டும்தானா அல்லது இனி வருங்காலங்களிலும் இதே மாதிரி விடுவாங்களானு தெரியலை’’ என்கின்றனர்.

அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் சிலரிடம் பேசிய போது, பொதுவாகவே தேர்தல் வரப்போகுதுன்னா அதுக்கு முந்தைய வருஷம் அரசு ஊழியர்களுக்குச் சில சலுகைகளைத் தர்றது அரசின் வழக்கம்தான். இதுல கட்சி வித்தியாசமெல்லாம் கிடையாது.

ஆனா ரேஷன் ஊழியர்களின் விடுமுறை தினங்களைப் பொறுத்தவரை இப்ப அறிவிக்கப்பட்டிருக்கிற அரசாணை புதுசா இருக்கு. பொதுவாகவே திமுக அரசுன்னா அரசு ஊழியர்களுக்கு ஆதரவான அரசுங்கிற பிம்பம் கருணாநிதி காலத்துல இருந்தது. ஆனா ஸ்டாலின் முதல்வரான பிறகு அதுல கொஞ்சம் மாற்றம் தெரிஞ்சது. 2021 தொடங்கி இப்ப வரை பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் பல போராட்டங்களை நடத்திட்டு வர்றாங்க. அதனால ரேஷன் ஊழியர்களையாவது மகிழ்ச்சிப் படுத்தலாம்னு செய்திருப்பது போலத் தெரியுது’’ என்கின்றனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.