ரோகித் சர்மா மீண்டும் சொதப்பல்..! அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் மோசமாக அவுட்

Rohit Sharma Retirement | இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அண்மை காலமாக மிக மோசமான பார்மில் இருக்கிறார். அவருடைய மிக மிக மோசமான பேட்டிங் காரணமாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இதனால் அந்த அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். அதன் பின்னர் ரோகித் சர்மா (Rohit Sharma) மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. அவரை இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எல்லாம் எழுந்தது. இந்திய கிரிக்கெட் வாரியமும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரை அழைத்து விளக்கம் கேட்டது. அப்போது இந்திய அணியில் இருக்கும் எல்லா பிளேயர்களும் கட்டாயம் ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி கேப்டன் ரோகித் சர்மா மும்பை அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாட முடிவு செய்து களமிறங்கினார். ஆனால் இந்த போட்டியில் அவர் எதிர்பார்த்தது போல் சிறப்பாக ஆடவில்லை. அதாவது ரோகித் சர்மாவின் மோசமான பேட்டிங் பார்ம் தொடர்கிறது. ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே அவர் 3 மற்றும் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெரிய இன்னிங்ஸ் ஆடியிருக்க வேண்டிய அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பது ரோகித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் பயணம் குறித்த கேள்வியை வலுவாக எழுப்பியுள்ளது.

ஏனென்றால் இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. அந்த தொடரில் வென்றிருந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றிருக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் பும்ரா கேப்டன்ஷிப் செய்த பெர்த் டெஸ்ட் போட்டியில் வென்ற இந்தியா, அடுத்தாக ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கிய போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. இதனால் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மீது பல கேள்விகள் எழுந்துள்ளன. 

இப்போது ரஞ்சி போட்டிகளிலும் மோசமாக ஆடுவதால் எதிர் வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் ரோகித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடிவு செய்யும் தொடராக இருக்கப்போகிறது. அந்த தொடரில் அவர் மீண்டும் மோசமாக ஆடினால் நிச்சயம் இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஒருவேளை அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் இன்னும் ஓராண்டு வரை அவர் விளையாடலாம். 

இருப்பினும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை பொறுத்தவரை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு பதிலாக இளம் பிளேயர்களை இந்திய அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். இதனால் இன்னும் ஒரு சில மாதங்களில் ரோகித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் பயணம் குறித்த உறுதியான தகவல் தெரிந்துவிடும்.

மேலும் படிக்க | ரோகித், ரஹானே விக்கெட்டை அள்ளிய ஜம்மு காஷ்மீர் பவுலர் உமர் யார்?

மேலும் படிக்க | சாஹலை முந்திய அர்ஷ்தீப்.. இந்தியாவுக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய பவுலர்களின் பட்டியல் இங்கே!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.