புதுடெல்லி: வக்ஃபு திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் ஜக்தாம்பிகா பால் விரைவாக நடவடிக்கைகளை நிறைவு செய்ததாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து ஆ.ராசா, கல்யாண் பானர்ஜி, ஒவைசி உள்பட 10 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ஆ.ராசா, அசாதுதீன் ஒவைசி, கல்யாண் பானர்ஜி, முகம்மது ஜாவேத், நசீர் ஹுசைன், மொகிபுல்லா, முகமது அப்துல்லா, அரவிந்த் ஸ்வாந்த், நதீம் உல் ஹக் மற்றும் இம்ரான் மசூத் உள்ளிட்டவர்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்ளை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை பாஜகவின் நிஷிகந்த் துபே கொண்டுவந்தார். பின்பு அது குழுவினரால் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் தொடங்கும்போதே சர்ச்சையுடனேயே தொடங்கியது. வரைவுச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து விவாதிக்க போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதிட்டனர். ஸ்ரீநகர் ஜமியா மஜித் தலைமை மதகுரு மிர்வாய்ஸ் உமர் பரூக் அழைக்கப்படுவதற்கு முன்பு, டெல்லி பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, அரசியல் காரணங்களுக்காக பாஜக, வக்ஃபு திருத்த மசோதாவை விரைவாக செயல்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.
சூடான விவாதங்கள் காரணமாக நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த இடைவேளைக்கு பின்னர் மிர்வாஸ் தலைமையிலான குழுவினர் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஆஜராகினர். கூட்டத்தில் இருந்து வேகமாக வெளிநடப்பு செய்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. கல்யாண் பானர்ஜி, காங்கிரஸ் கட்சியின் நசீர் ஹுசைன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் குழுவின் நடவடிக்கைகள் கேலிக்கூத்தாக உள்ளதென கடுமையாக விமர்சித்தனர்.
இதனிடையே, முன்மொழியப்பட்ட திருத்தங்களை உட்பிரிவு வாரியாக ஆய்வு செய்ய திட்டமிடப்பட்ட ஜன.27-ம் தேதி கூட்டத்தை ஜன.30 அல்லது 31 தேதிக்கு மாற்ற வேண்டும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் வக்ஃபு (திருத்தம்) சட்டம் 2024-ஐ அறிமுகப்படுத்தினார். பின்னர் அது 2024, ஆக.8-ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.