திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே புழுதிக்குடி கிராம மக்கள் குடிநீருக்காக 15 ஆண்டுகளாக அலைந்து திரிந்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் புழுதிக்குடி ஊராட்சியில் மேல புழுதிக்குடி, அகரவயல், ஆண்டிக்கோட்டகம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் பெரும்பாலும் விவசாய தொழிலாளர்களும், சிறு, குறு விவசாயிகளும் உள்ளனர்.
இந்த கிராமத்துக்கு கடந்த 15 ஆண்டு காலமாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூசலாங்குடி கிராமத்தில் ஒரு ஆழ்துளை குழாயில் மட்டும் நல்ல தண்ணீர் வருவதால், அதையே புழுதிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மக்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. இதற்காக தினம்தோறும் காலையில் அங்கு சைக்கிளில் அல்லது நடந்து சென்று குடிநீர் கொண்டு வர வேண்டிய நிலை இருந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து புழுதிக்குடியை சேர்ந்த விவசாயி முருகையன் கூறியதாவது: திருத்துறைப்பூண்டி மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பாக மாறிப் போனதால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நம்பியே இந்த பகுதி கிராமங்கள் உள்ளன. இந்த சூழலில் எங்களது கிராமத்தில் நிலத்தடி நீர் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே உப்பாகிவிட்டது.
இதனால் கோட்டூரில் உள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயிலிருந்து புழுதிக்குடிக்கு குடிநீர் விநியோகிக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் பலமுறை கோரிக்கை மனுவை கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை. அதேபோல, ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதாகக் கூறி, உப்புநீர் உள்ள பகுதியிலேயே ஆழ்துளை கிணறு அமைத்து இணைப்பு வழங்கிவிட்டனர்.
இந்த சூழலில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக 2 கி.மீ. தொலைவில் பூசலாங்குடியில் உள்ள ஆழ்துளை குழாயில் இருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே, எங்கள் கிராமத்துக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் இணைப்பை ஏற்படுத்தி குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றார். இதுதொடர்பாக கோட்டூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விசாரித்தபோது, புழுதிக்குடி கிராமத்துக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இணைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்தனர்.