வனங்கள் அடர்ந்த கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் வனவிலங்களின் நடமாட்டமும் அதிகளவில் காணப்படுகின்றன. அவற்றின் வாழிடச் சூழல்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணமாக தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் நடமாட வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றன. யானை, புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளுடன் மனித எதிர்கொள்ளல்கள் என்பது தவிர்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியைச் சேர்ந்த ராதா என்கிற பெண் தொழிலாளி இன்று காபி தோட்டத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது புலி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைக் கண்டு பதறிய சக தொழிலாளர்கள் புலியை விரட்டி ராதாவின் சடலத்தை மீட்டுள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் வனவிலங்குகளை கண்காணிக்க வனத்துறை தவறியதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோகம் குறித்து தெரிவித்த சக தொழிலாளர்கள், “மானந்தவாடி, பஞ்சாரக்கொல்லி பகுதியில் உள்ள தனியார் காபி தோட்டத்தில் பெண்கள் ஒன்றாக வேலை செய்துகொண்டிருந்தோம். எங்களுக்கு பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த ராதா காபி செடிகளுக்கு அடியில் சிக்கி திடீரென அலறித்துடித்தார். பதறியடித்து அருகில் சென்று பார்த்த போது புலி ஒன்று ராதாவை கடித்துக் குதறிக் கொண்டிருந்தது. கூச்சலிட்டும் கற்களை தூக்கி எறிந்தும் விரட்டியடித்தோம். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. நொடியில் ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்” என கண்ணீர் வடிக்கின்றனர்.
இது குறித்து தெரிவித்த வயநாடு வனத்துறையினர், “47 வயதான ராதா என்பவர் புலி தாக்கியதில் உயிரிழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரின் கணவர் வனத்துறையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். மக்களை பாதுகாக்கும் பணியில் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராதா குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.