சென்னை: அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறுமியின் வாக்குமூலம் பொதுவெளியில் வெளியானது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவை உயர் நீதிமன்றம் மாற்றி அமைத்துள்ளது. சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், புகார் அளிக்கச் சென்ற அந்த சிறுமியின் பெற்றோரை போலீஸார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியது.
சிறப்பு புலனாய்வு குழு: இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சென்னை பெருநகர காவல் இணை ஆணையராக பதவி வகித்த சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் ஆவடி சரக சட்டம் -ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்கு துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவி்ட்டது.
இந்த வழக்கை கடந்தமுறை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த சிறுமியின் வாக்குமூலம் பொதுவெளியில் வெளியானது தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளையும் இதே குழுவே விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், சிறப்பு விசாரணைக்குழுவில் இடம் பெற்றுள்ள காவல்துறை இணை ஆணையர் சரோஜ் குமார் தாக்கூர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால் மற்றும் சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கையும் விசாரித்து வருவதால், அண்ணாநகர் சிறுமியின் வாக்குமூலம் தொடர்பான வழக்கை விசாரிக்க வேறு குழுவை நியமிக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தார்.
அதையேற்ற நீதிபதிகள், அந்த சிறுமியின் வாக்குமூலம் வெளியான விவகாரம் தொடர்பாக சென்னை சட்டம் – ஒழுங்கு இணை ஆணையர் பக்கெர்லா சிபஸ் கல்யாண் தலைமையில் சைபர் கிரைம் ஆய்வாளர்கள் சாந்திதேவி, பிரவீண்குமார் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்து, இந்தக் குழு 2 வார காலத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.