முக்கிய எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் களையிழந்து காணப்படுகிறது. தெருவுக்குத் தெரு அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், பணம், பரிசுப்பொருள் என கடந்த 2023-ல் கண்ட திருவிழா கோலம் இப்போது இல்லை. இந்த நிலையில் திமுகவுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியிடம் பேசினோம்.
கடந்த இடைத்தேர்தலில் பணம், பரிசுப்பொருட்கள் விநியோகம் பெருமளவில் நடந்தது. இம்முறையும் வாக்காளர்களிடம் அது போன்ற எதிர்பார்ப்பு உள்ளதா? – தங்கள் பகுதி அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா என்ற எதிர்பார்ப்புத்தான் வாக்காளர்களிடம் உள்ளது. பணம், பரிசுப்பொருளுக்கு இவர்கள் ஆசைப்படவில்லை. இந்த முறை பிரச்சாரத்திற்கான செலவுகளைத் தவிர்த்து, அதனை வாக்குகளுக்கு பணமாக கொடுக்க திமுக-வினர் முடிவு செய்துள்ளார்கள். அதற்காக, வார்டு வாரியாக, வீதி வாரியாக வாக்காளர்களை கணக்கெடுத்து, பொறுப்பாளர்களை நியமித்து, அவர்கள் மூலம் வாக்குக்கு பணம் கொடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
நாதக பிரச்சாரத்திற்கு நாங்கள் எந்தத் தடையும் செய்யவில்லை. அவர்களுக்காக எங்களது பிரச்சாரத்தைக்கூட விட்டுத் தரத் தயாராக உள்ளோம் என்று அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறாரே..? – அவர் ஒரு பண்பான அரசியல்வாதி. ஒரு வகையில் எனக்கு தூரத்துச் சொந்தம். அவரது கட்சி தலைமையின் தத்துவம் வேண்டுமானால், தவறாக இருக்கலாம். ஆனால், அவரை நான் தவறாகச் சொல்லமாட்டேன். திமுக-வில் அவரால் சில விஷயங்களை செயல்படுத்த முடியாது. அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே இதை என்னிடம் சொல்கிறார்கள்.
திமுக வேட்பாளர் சந்திரகுமார் ஏற்கெனவே இங்கு வெற்றி பெற்றவர். இது அவருக்கு பலமா… பலவீனமா? – நிச்சயமாக பலவீனம் தான். தன்னை எம்எல்ஏ ஆக்கிய கேப்டனுக்கு, சந்திரகுமார் துரோகம் செய்து விட்டார் என்று பல இடங்களில் வாக்காளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவரை சுயநலவாதி, துரோகி என்று ஆவேசத்துடன் கூறுகின்றனர். ஆனால், அவரது பலவீனத்தை தோண்டி எடுத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை எனக்கு இல்லை. நாம் தமிழரின் தத்துவம், சித்தாந்தத்தை முன்னிறுத்தியே நான் நிற்கிறேன்.
தேர்தலை புறக்கணித்துள்ள அதிமுக, பாஜக-வினர் உங்களுக்கு வாக்களிப்பார்களா? – உறுதியாக அவர்கள் வாக்குகள் எனக்குக் கிடைக்கும். ஒரு பெண்ணாக, இந்த மண்ணின் மகளாக என்னை அவர்கள் நேசிக்கிறார்கள். அதோடு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எனது பெரியப்பா முறை உறவினராவார். எங்கள் இருவருக்கும் சிவகிரி பொங்காளியம்மன் தான் குலதெய்வம். நான் வாக்கு சேகரிக்கச் செல்லும் போது, அதிமுக-வினர் இதைத் தெரிந்து பாராட்டுகின்றனர். நம்ம பொண்ணுக்கு சீமான் வாய்ப்புத் தந்துள்ளார் என்று மகிழ்ச்சி அடைகிறார்கள்.
பெரியாரை சீமான் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவரது சொந்த மண்ணில் தேர்தலைச் சந்திக்கும் உங்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தாதா? – தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால், பெரியார் குறித்து சீமான் எதுவும் பேசவில்லை. ஒருவர் கருத்தை எடுத்துச் சொல்லும் போது, அது சரியா தவறா என்று சிந்திப்பது தானே பகுத்தறிவு. அதுபோல, சீமான் சொல்வது சரியா என்று பகுத்தறிவோடு சிந்தித்தால் போதும். அதைவிடுத்து, பெரியாரை சீமான் அவமதிக்கிறார் என்று சொல்வதை ஈரோடு மக்கள் ஏற்கமாட்டார்கள்.
முக்கிய கட்சிகள் களத்தில் இல்லாததால் ஒரே ஒரு அமைச்சர் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். சீமான் பிரச்சாரத்திற்கு பிறகு இந்த நிலை மாறுமா? – இப்போதைக்கு ஈரோடு கிழக்கு தொகுதியை தக்க வைப்பது மட்டும்தான் அவர்களது குறிக்கோளாக உள்ளது. அதோடு, இப்போது அமைச்சர் பட்டாளம் வாக்குக் கேட்டு வந்தால், ஒன்றரை ஆண்டுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என்று மக்கள் கேள்வி கேட்பார்கள். அதற்குப் பயந்தே அமைச்சர்கள் இந்தப் பக்கம் வரமாட்டார்கள்.