பிரயாக்ராஜ்: ‘திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழும் லிவ்-இன் உறவுக்கு அங்கீகாரம் இல்லையென்றாலும், இளைஞர்களுக்கு அதன் மீது அதிக ஈர்ப்பு இருப்பதால், சமூக ஒழுக்கங்களைப் பாதுகாக்க லிவ்-இன் உறவு நிமித்தம் சில வழிமுறைகளை உருவாக்க வேண்டும்’ என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
வாரணாசியைச் சேர்ந்த ஆகாஷ் கேசரி என்ற இளைஞர் மீது பெண் ஒருவரை திருமணம் செய்வதாக கூறி, திருமணத்துக்கு முன்பு அவருடன் பாலியல் உறவில் இருந்தகாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் மீது ஐபிசி மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையின்போது நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி நளின் குமார் ஸ்ரீவஸ்தவா, ஆகாஷுக்கு ஜாமீன் வழங்கி அளித்த உத்தரவில், “லிவ் – இன் உறவுகளுக்கு நமது சமூகத்தில் அங்கீகாரம் இல்லை. என்றாலும், ஒரு ஆணோ பெண்ணோ தங்களின் இணையர்களுக்கான பொறுப்புக்களில் இருந்து எளிதாக தப்பித்துக் கொள்ள முடியும் என்பதால் அவர்கள் மத்தியில் அத்தகைய உறவுக்கு ஆதரவும், ஈர்ப்பும் அதிகரித்து வருகிறது.
சமூகத்தின் ஒழுக்க விழுமியங்களைக் காப்பாற்றுவதற்காக நாம் அனைவரும் ஒன்றாக கூடி சிந்தித்து இது தொடர்பாக சில கட்டுப்பாடுகளையும், தீர்வினையும் கண்டு பிடிக்க வேண்டிய நேரம் இது.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆகாஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணையின் போது, “அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்தும் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை. அந்தப் பெண் ஒரு மேஜர், இருவரின் சம்மதத்துடன் தான் அவர்களுக்குள் பரஸ்பர உறவு இருந்து வந்துள்ளது.
மேலும் அவர், ஆகாஷூடன் ஆறு ஆண்டுகள் லிவ் இன் உறவில் வாழ்ந்துள்ளார். அந்த காலக்கட்டத்தில் ஆகாஷ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது போல் கருகலைப்பு எதுவும் நடைபெறவில்லை.” என்று தெரிவித்தார். அதற்கான சான்றுகளையும் சமர்ப்பித்தார். மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளிக்கவில்லை என்று ஆகாஷீன் வழக்கறிஞக் தெரிவித்தார்.