புதுடெல்லி,
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பல்வேறு கட்சியினர் டெல்லியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கெஜ்ரிவாலின் கட்-அவுட்டை யமுனை நதியில் மூழ்கச் செய்து பாஜக வேட்பாளர் நூதன பிரசாரம் ஈட்டுபட்டார். இன்று காலையில் புதுடெல்லி தொகுதியின் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா படகு ஒன்றில், டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்-அவுட்டுடன் யமுனை நதியில் பயணம் செய்தார். அவருடன் கட்சி உறுப்பினர்கள் சிலரும் இருந்தனர். நதியின் மையப்பகுதிக்கு சென்ற பாஜக வேட்பாளர், கெஜ்ரிவாலின் உருவப் படத்தை ஊடகங்களின் முன்னிலையில் யமுனையில் பல முறை மூழ்கடித்தார்.
அந்த கட்-அவுட்டில் கெஜ்ரிவால் தனது இரு காதுகளையும் பிடித்திருப்பது போன்று இருந்தது. மேலும் ‘நான் தோல்வியடைந்து விட்டேன், 2025-க்குள் யமுனையை தூய்மைப்படுத்த தவறி விட்டேன். எனக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. பின்பு பேசிய வர்மா, “யமுனை நதியை நாம் முழுமையாக தூய்மைப்படுத்த முடியும். அதைத் தூய்மைப்படுத்துவது ஒன்றும் ராக்கெட் அறிவியல் இல்லை. பிரதமர் மோடி, சபர்மதி நதியில் செய்தது போல, நாம் யமுனை நதியில் செய்ய முடியும். அதற்கு 11 வருடங்கள் என்பது மிக நீண்ட காலம்” என்று தெரிவித்தார்.