சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தையின் கண்முன்னே பழங்குடியின சிறுமியை குழுவாக சேர்ந்து வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சத்தீஸ்கரின் பஹாடி கோர்வா பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கடந்த 2021-ம் ஆண்டு வன்கொடுமைக்கு ஆளாக்கி கொடூரமாக கொலை செய்தது. மேலும், அந்த சிறுமியின் குடும்பத்தை சேர்ந்த தந்தை உள்ளிட்ட இருவரை கற்களால் அடித்து அந்த கும்பல் கொன்றது.
இதுதொடர்பான வழக்கு கோர்பா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நீதிபதி கூறியுள்ளதாவது:
பழங்குடியின சிறுமியின் தந்தையின் கண்முன்னாலேயே 5 பேர் கும்பல் சிறிதும் ஈவுஇரக்கமின்றி இரக்கமின்றி வன்கொடுமையில் ஈடுபட்டது மன்னிக்க முடியாத குற்றம். வக்கிரமான மற்றும் கொடூரமான இந்த செயலில் ஈடுபட்டதுடன் சிறுமியின் தந்தை மற்றும் சின்னஞ்சிறு குழந்தை ஒன்றையும் அந்த கும்பல் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளது.
குற்றத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்து, சந்த்ராம் மஞ்ச்வர் (49), அனில் குமார் சார்தி (24), பரதேசி ராம் (39), ஆனந்த் ராம் பனிக்கா (29), அப்துல் ஜாபர் (34) ஆகிய 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.
ஆறாவது குற்றவாளியான உமாசங்கர் யாதவ் (26) மீதான வன்கொடுமை குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவருக்கு மட்டும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.