டெல்லியில் திமுக மாணவரணி போராட்டம்: பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பல்லாவரம்: “பல்கலைக்கழகத்தை மாநில அரசிடமிருந்து பறிக்கும் திட்டத்தை முறியடிக்க திமுக மாணவரணி சார்பில் டெல்லியில் மாபெரும் போராட்டம் நடைபெறும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் செலுத்தும் பொதுக்கூட்டம் பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியில் இன்று மாலை நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியது: “அன்னைத் தமிழை அழிக்க இந்தி மொழி திணிக்கப்படுகிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியை மத்திய அரசு திணிக்கிறது.இது அரசியல் போராட்டம் அல்ல, பண்பாட்டுப் போராட்டம் என தந்தை பெரியார் சொன்னார்.

இந்தி மட்டுமல்ல எத்தனை மொழியை திணித்தாலும் தமிழ் அழிந்து விடாது. ஆனால் தமிழனின் பண்பாடு அழிந்து போகும் என பெரியார் சொன்னார். மொழி ஆதிக்கம் நிர்வாக ஆதிக்கத்துக்கு வழி வகுக்கும் அது பொருளாதார ஆதிக்கத்துக்கு வழி கோளும் என அண்ணா சொன்னார். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு ஏராளமான வீரர்கள் இந்த போர்க்களத்தில் தங்களுடைய உயிரைக் கொடுத்தார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது நமது பண்பாட்டை காக்கும் போராட்டம். திமுக ஆட்சி அமைந்த பிறகு தான் தமிழகத்தில் இரு மொழி கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. அதுக்கு சிக்கலை ஏற்படுத்த தான் மும்மொழி கொள்கையை கொண்டு வருகின்றனர். இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கவே தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படுகிறது. இதுபோல் நாம் எத்தனையோ பண்பாட்டு, மொழி திணிப்பை கடந்து தான் வந்திருக்கிறோம். 5500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் தொன்மையான மொழி என நாம் ஆய்வு மூலம் நிரூபித்திருக்கிறோம்.

நேரடியாக இந்தியை திணிக்க முடியாத காரணத்தினால் பள்ளி மூலமாகவும் கல்லூரி மூலமாகவும் பல்கலைக்கழகம் மூலமாகவும் திணிக்கப்படுகிறது. தமிழக மக்களால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை மட்டும் ஆளுநர் நியமிப்பாரா? பேராசிரியர் சம்பளம் கட்டிட வசதி இடவசதி போன்றவை செய்துள்ள எங்களால் பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க முடியாதா? ஏன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் வேந்தராக இருக்கக் கூடாது?

அண்மையில் யுஜிசி வரைமுறை கொண்டு வரப்பட்டது. அசை திரும்ப பெற வலியுறுத்தி நாட்டிலேயே தமிழகம் தான் முதல் முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இன்றைய மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். இதேபோல் இண்டியா கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன். தமிழகத்தை தொடர்ந்து கேரளா மாநிலத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களை உருவாக்குவது மாநிலங்கள் பல்கலைக்கழகங்களை நிர்வகிக்க கூடிய அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டாமா? எதை செய்ய வேண்டுமோ? அதை செய்யாமல். எதை செய்யக்கூடாதோ அதை எல்லாம் மத்திய அரசு செய்கிறது. தமிழகத்துக்கு வரவேண்டிய இயற்கை பேரிடர் நிதியை தர மறுக்கின்றனர். பள்ளிக்கல்வித் துறைக்கு. நிதியை மறுக்கின்றனர். புதிய சிறப்பு திட்டத்தை அறிவிக்க மறுக்கின்றனர்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் என்ற பெயரே இல்லை. இந்தியை மட்டும் திணிக்கின்றனர். சமஸ்கிருதத்தின் பெயர்களை புகுத்துகிறார்கள். மாநில உரிமைகளில் தலையிடுகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்து குழந்தைகளை பலி வாங்குகின்றனர். அதற்காக நீட் நடத்துவார்கள், இதுதான் பாஜக அரசின் எதேச்சதிகாரம். ஒரே மதம், ஒரே மொழி தான் இந்தியாவில் இருக்கிறது என பாஜக நினைக்கிறது.

முதலில் இந்தி பிறகு சமஸ்கிருதம் இதுதான் பாஜகவின் கொள்கை. நாம் இன்று அடைந்துள்ள வளர்ச்சி எளிதாக கிடைக்கவில்லை. சமூக நீதிக்காக நூறாண்டு காலம் போராடி இருக்கிறோம். திராவிட மாடல் அரசு தமிழகத்தை அனைத்து வழிகளிலும் உயர்த்தி வருகிறது. தமிழகம் இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக வளர்ந்துள்ளது. தேசிய உள்நாட்டு உற்பத்தியில் 5.4 விழுக்காடாக இருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் 9.2 விழுக்காடு உயர்ந்துள்ளது.

உள்நாட்டு பொருளாதார கொள்கையில் தமிழகம் வளர்ச்சியை எட்டியுள்ளது. மருத்துவம், கல்வி, சமூக நலன் இவற்றை மேம்படுத்த இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தியாவின் வலிமைமிக்க விளையாட்டு மையமாக தமிழகம் வளர்ந்துள்ளது. மக்களைதேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐநா அமைப்பு மூலம் விருது பெற்றுள்ளோம். தமிழகத்தில் 2.2 விழுக்காடு மக்கள் ஏழை நிலைமையில் உள்ளனர். என குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய சராசரியான 14.9 விழுக்காடு மிக மிக குறைவு. இரண்டு ஆண்டுகளில் வறுமையும் முற்றிலும் ஒழிக்க தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகம் அமைதி மாநிலமாக இருப்பதால் தமிழகத்தில் பெண்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனர். இந்தியாவில் 41% பெண்கள் தமிழகத்தில் வேலை செய்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் கோடி தனியார் முதலீட்டைக் கொண்டு வந்துள்ளோம். இப்படி வான்நோக்கி வளர்ந்து வருவது தமிழ்நாடு. இந்த வளர்ச்சியை ஆதிக்க சக்திகள் விரும்பவில்லை. இந்த வளர்ச்சி தடுக்க மாநில சுய ஆட்சியை தடுக்கின்றன. கூட்டாட்சிக்கு வேட்டு வைக்கின்றனர். இந்தி மொழியை அனைத்து இடத்திலும் ஆதிக்க மனப்பான்மையுடன் திணிக்கின்றனர்.

நிதி தர மறுக்கின்றனர். இதற்கு எதிராக திமுக அரசு எதற்கும் அஞ்சாமல் போராடி வருகிறது. இன்னும் முடியவில்லை இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மத்திய அரசு பணிக்கு இந்தி தெரிய வேண்டுமென சொல்கிறது. பொதிகை தொலைக்காட்சியில் இந்தி மாதம் கொண்டாடப்படுகிறது. தமிழ் தாய் வாழ்த்து பாடலில் திராவிடர் சொல் நாடு என்ற சொல்லை எடுத்துவிட்டு உச்சரிக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பப்படும் கடிதங்களுக்கு இந்தியில் பதில் அனுப்பப்படுகிறது.

மொழி சிதைந்தால் இனம் சிதைந்து விடும், இனம் சிதைந்தால் பண்பாடு சிதைந்து விடும், பண்பாடு சிதைந்தால் நாம் அடையாளம் காணாமல் போய்விடும், அடையாளம் போனால் , தமிழன் என சொல்வது போய்விடும், தமிழன் என்ற சொல் போய்விட்டால், நம் வாழ்ந்தும் பயனில்லை, மொழியையும், இனத்தையும் நாட்டையும், காக்க வேண்டும் இந்த மூன்றையும் காக்க வேண்டும், திமுக உருவாக்கிய ஆட்சியை காக்க வேண்டும், அன்று மாணவர்களும் இளைஞர்களும் இணைந்து தமிழை காப்பாற்றினர்,

பல்கலைக்கழகத்தை மாநில அரசிடமிருந்து பறிக்கும் திட்டத்தை முறியடிக்க திமுக மாணவரணி சார்பில் டெல்லியில் மாபெரும் போராட்டம் நடைபெறும். அன்று தமிழை மட்டும் இன்றி அண்டை மாநிலத்தில் உள்ள மொழியையும் காப்பாற்றினோம். இன்று அண்டை நாட்டு பல்கலைக்கழகத்தையும் காப்பாற்றப்போகிறோம். மாநில உரிமையும் காப்போம்.

வரும் சட்டமன்ற தேர்தலில் கொள்கைவாதியாக இருக்கும் நமக்கும், கொத்தடிமை கூட்டமாக இருக்கும் அதிமுகவுக்கும் நடக்கிற தேர்தல் என்பதை மறந்து விடாதீர்கள். தமிழகத்தை எல்லா வகையிலும் முன்னேற்றக் கூடிய திமுகவுக்கும், தமிழகத்தை எல்லா வகையிலும் அடமானம் வைத்த அதிமுகவுக்கும் இடையே நடக்கும் தேர்தல். தான் 2019 முதல் நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். இது தொடரும் 2026 தேர்தலிலும் நாம் தான் வெல்வோம். ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம். மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் செலுத்தும் இந்நாளில் நாம் உறுதி ஏற்போம், என்று முதல்வர் பேசினார். இந்த கூட்டத்தில் அமைச்சர் அன்பரசன், எம்.பிக்கள் டி.ஆர். பாலு, செல்வம், எம்,எல்,ஏக்கள் எஸ்.ஆர். ராஜா, இ. கருணாநிதி, வரலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.