உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறியது, வளரும், வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கும் யுஎஸ்-எய்ட் நிதியுதவியை முடக்கியது என்ற அடுத்தடுத்த அதிரடிகளால் தனது நம்பகத்தன்மையை அமெரிக்கா இழக்கக் கூடும் என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.
பொருளாதார வல்லரசான அமெரிக்கா சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி, ஊழல் எதிர்ப்பு, பாதுகாப்பு, ஊட்டச்சத்து குறைபாடு போக்குதல், எச்ஐவி போன்ற நோய் பாதிப்பை தடுக்க உதவுதல் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களுக்காக வளரும், வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளுக்கு நிதியுதவி அளிக்கிறது. இதற்காக யுஎஸ் எய்ட் (USAID) என்ற சுயாதீன அமைப்பை உருவாக்கி உதவிக்கரம் நீட்டி வருகிறது.
இந்நிலையில், உலகளவில் பல்வேறு நாடுகளிலும் மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய உதவிகளுக்கான நிதியை 90 நாட்களுக்கு முடக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. புதிதாக ஏதும் நிதி ஒதுக்கப்படாது என்று தெரிவித்துள்ளது. ஒரே சிறிய ஆறுதலாக, சூடான் உள்ளிட்ட கடும் பஞ்சத்தால் வாடும் நாடுகளுக்கு உணவு வழங்குவதற்கான திட்டத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல், எகிப்துக்கு விலக்கு ஏன்? – சூடானுக்கான விலக்கு ஆறுதல் என்றாலும் கூட இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கான அவசர உணவுத் திட்டங்கள் மற்றும் ராணுவ உதவிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது. இஸ்ரேல், எகிப்து வரிசையில் உக்ரைனுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. உக்ரைனுக்கு ஜோ பைடன் நிதியை வாரி வழங்கிய நிலையில் அதுபற்றி தற்போதைய அரசு ஏதும் அறிவிக்கவில்லை.
அப்படியிருக்க இஸ்ரேல், எகிப்துக்கு மட்டும் ஏன் இத்தனை கரிசனம் என்ற பின்னணியை ஆராய்ந்தால் அதில் அமெரிக்காவின் வெளியுறவு உத்தி இருப்பதைப் புரிந்துகொள்ளலாம். இஸ்ரேல் ஆண்டுதோறும் அமெரிக்காவிடமிருந்து ராணுவ உதவியாக 3.3 பில்லியன் டாலர் பெறுகிறது, எகிப்து 1.3 பில்லியன் டாலர் அளவில் பயனடைகிறது. இந்த விலக்குகள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு, குறிப்பாக ஸ்திரத்தன்மையற்ற மத்திய கிழக்கில் இந்த இரு நாடுகளின் அதிமுக்கியத்துவத்தை பிரதிபலிக்கின்றன. அதனால் இஸ்ரேல், எகிப்துக்கான நிதியுதவியில் அமெரிக்கா கைவைக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மத்தியக் கிழக்கு ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்துள்ள அமெரிக்கா ஏன் உக்ரைன், தைவான் மற்றும் எஸ்டோனியா, லிதுவேனியா, லாட்வியாவை உள்ளடக்கிய பால்டிக் நாடுகளை கருத்தில் கொள்ளவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில், இந்த நாடுகள் அனைத்தும் பிராந்திய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்க ஆதரவை நம்பியுள்ள நாடுகள் ஆகும். திடீர் உதவி நிறுத்தம் அவற்றை பலவீனப்படுத்தும். அதேபோல் லெபனானுக்கான நிதியுதவி பற்றியும் அமெரிக்கா ஏதும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. இது ராணுவத்தை வெகுவாக பாதிக்கலாம். ஈரான் தூண்டிவிடும் கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தலை சமாளிக்க லெபனானுக்கு அமெரிக்க நிதியுதவி அவசியம். அதனால் இந்த நாடுகளுக்கான நிதியுதவியை அமெரிக்க நீண்ட காலம் முடக்காது என்றும் கூறப்படுகிறது.
90 நாள் முடக்கமும், எதிர்வினையும்… – முதற்கட்டமாக 90 நாட்களுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னரே இந்த உத்தரவினை நீட்டிப்பதா, இல்லை விலக்கிக் கொள்வதா என்பது பற்றிய முடிவெடுக்கப்படும்.
யுஎஸ் எய்ட் அமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “அமெரிக்காவின் இந்த உத்தரவு அதன்மூலம் பயன்பெறும் திட்ட்ங்களுக்கும், நபர்களுக்கும் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாது. கூடவே இந்தச் சேவைகளை வழங்கும் பணியில் இருந்தவர்களையும் பாதிக்கும். யுஎஸ் எய்ட் பணியில் ஏராளமானோர் உள்ளனர். அவர்களின் உணவு, குடியிருப்புச் செலவு உள்ளிட்டவையும் இந்தத் திட்டத்தின் கீழே பராமரிக்கப்பட்டது. அமெரிக்காவின் இரக்கமற்ற இந்த முடிவின் விளைவு கொடூரமானதாக இருக்கும்.” என்றார்.
எய்ட்ஸ் ஒழிப்புத் திட்டத்துக்கு செக்! PEPFAR – President’s Emergency Plan for AIDS Relief எனப்படும் எய்ட்ஸ் நிவாரணத்திற்கான அமெரிக்க அதிபரின் அவசர நிதியுதவி திட்டமும் யுஎஸ் – எய்ட் நிதி முடக்கத்தால் பாதிக்கப்படும். உண்மையில் மற்ற எல்லா நலத்திட்டங்களையும்விட இந்தத் திட்டம் மிகப்பெரிய சவாலை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தத் திட்டம் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் நிர்வாகத்தின் கீழ் 2003-ல் நிறுவப்பட்டது, அதிலிருந்து இரண்டு தசாப்தங்களாக பல உதவிகளை மேற்கொண்டது. 2023-ல் அதன் நிதியுதவியை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை காங்கிரஸ் தவறவிட்டது. அதனால் சிறிய முடக்கம் எற்பட்டது. ஆனால், அதன்பின்னர் நிதியுதவி மார்ச் 2025 வரை ஒரு வருட நீட்டிப்பைப் பெற்றது, இப்போது அது காலாவதியாக சில காலமே உள்ள நிலையில் யுஎஸ்-எய்ட் நிதியுதவி 90 நாட்கள் முடக்கப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது. இதனால் இத்திட்டம் பெரும் பின்னடைவை சந்திக்கும்.
யுஎஸ் காங்கிரஸ் எழுப்பும் எச்சரிக்கை: ட்ரம்ப் உத்தரவு குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கவலை எழுப்பியுள்ளனர். வெளிநாட்டு உதவி உட்பட மத்திய பட்ஜெட் காங்கிரஸின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதைக் குறிப்பிட்டுள்ள அவர்கள் அமெரிக்க உதவியை நிறுத்துவது, சீனா மற்றும் ரஷ்யா போன்ற போட்டியாளர்களிடம் இருந்து நிதியுதவி பெறும் நிர்பந்தத்துக்கு சர்வதேச நாடுகளை உட்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.
சவுமியா சுவாமிநாதன் கருத்து: அமெரிக்காவின் அடுத்தடுத்த அதிரடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அந்நாடு வெளியேறியது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், “ஒரு நாடு எவ்வளவு வளமானதாக இருக்கிறதோ அதற்கேற்ப அந்த நாடு பிறநாடுகளின் மேம்பாட்டுக்காக நிதியுதவி செலுத்தும். ஒரு நாட்டின் ஜிடிபியில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அந்நாடு ஒதுக்கும். இப்போதைய நடைமுறை மிகவும் நியாயமானதாகவே இருக்கிறது. ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ போன்ற சிறிய நாடு அமெரிக்காவுக்கு நிகராக நிதியுதவிகளை வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது அல்லவா?
மிக முக்கியத்துவம் வாய்ந்த, மிகப்பெரிய நாடான அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறிய முடிவு நல்லது அல்ல. இப்போதைய சூழலில் சுகாதார விஷயத்தில் எல்லா நாடுகளும் இணைந்திருக்க வேண்டியது அவசியம். ஓரிடத்தில் பரவும் நோய் உலகின் இன்னொரு இடத்துக்கு பரவ வெறும் 30 மணி நேரம் போதும் என்றளவுக்கு உலக நாடுகள் பிண்ணிப் பிணைந்துள்ளன. எனவே சர்வதேச ஒத்துழைப்பு இல்லாவிட்டால், உலக நாடுகளுக்கு இடையே புரிதலுடன் கூடிய திட்டங்கள், வழிமுறைகள், வழிகாட்டுதல்கள் இல்லாவிட்டால் சுகாதார பிரச்சினைகளை சமாளிப்பது சிக்கலாகிவிடும்.
உலக சுகாதார நிறுவனமானது 193 நாடுகள் சங்கமிக்கும் தளம். அங்கே நோய்கள் பற்றி விரிவான ஆலோசனைகள் நடைபெறுகிறது. சர்வதேச சுகாதார சிக்கல்கள், பெருந்தொற்றுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும் தளமாக இயங்குகிறது. அதிலிருந்து அமெரிக்கா வெளியேறியதால் மிக முக்கியமான சுகாதார புள்ளிவிவர ஆவணங்களை அந்நாடு அணுக முடியாமல் போகும். இது அந்நாட்டுக்கும் சிக்கலே. அமெரிக்கா போன்ற தொழில்நுட்ப, அறிவியல் நிபுணத்துவம் கொண்ட நாடு உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” கூறியுள்ளார்.
நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும்: யுஎஸ்-எய்ட் முடக்கம் வெளிநாட்டு உதவியில் உலகளாவிய தலைமைத்துவம் பெற்றுள்ள அமெரிக்கா மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து யுஎஸ்-எய்ட் அமைப்பின் முன்னாள் அதிகாரி ஜெரமி கோனிடிங்க் கூறுகையில், “இது பைத்தியக்காரத்தனம். அமெரிக்காவின் இந்த முடக்கம் அமலுக்கு வந்தால் பல உயிர்கள் பறிபோகும்” என்று கூறுகிறார்.
யுஎஸ் எய்ட் நிதியுதவியை நிறுத்தி அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பல்வேறு விமர்சனங்களையும் ஈர்த்துள்ளதற்கு புவி அரசியலில் இது ஏற்படுத்தக் கூடிய அதிர்வுகளே காரணம். இந்த உத்தரவு வெறும் குற்றலை விளைவுகளாக அல்லாமல் பூகம்பத்தைத் தொடர்ந்து வரும் நில அதிர்வுகள் போல் அதிர்வலைகளைக் கடத்தும்.