மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு மதுரை ஆதீனம் செல்வதற்கு போலீஸார் தடை விதித்தனர். இது குறித்து ஆவேசத்துடன் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் வழிபாடு செய்வதற்காக சனிக்கிழமை மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் செல்லவிருந்தார். அவர் மலைமீது சென்று வழிபாடு செய்ய போலீஸார் தடை விதித்தனர். இதனால் திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பயணத்தை ரத்து செய்தார்.
இது குறித்து மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று இன்று வழிபாடு செய்யத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், போலீஸார் என்னை வரக்கூடாது எனத் தடுத்துவிட்டனர். மாற்று சமயத்தினர் தகராறு செய்து விடுவர் என போலீஸார் அச்சப்படுகிறார்களா எனத் தெரியவில்லை. அதற்கு நான், ‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக, குவலயத்தில் ஒரு வழி பிறக்கும் என்று சொன்னேன்.
புலவர் நக்கீரன் கூட முருகனைப் பற்றித்தான் பாடியிருக்கிறார். சிக்கந்தர் மலையைப் பற்றி பாடவில்லை. மகாகவி பாரதியார் கூட அண்டிப் பிழைக்கும் ஆடு; அதனை ஆதரிக்க வேண்டுமடி பாப்பா என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆனால் ஆட்டை கொண்டு சென்று அறுத்து சாப்பிடச் சொல்லவில்லை. திருப்பரங்குன்றம் முருகன் மலைதான் என இலக்கியங்களும், நக்கீரரும் குறிப்பிடுகின்றனர்.
மலைக்கு மேலேயும், கீழேயும் சைவ வழிபாட்டுத்தலம் இருக்கும்போது இடையில் உள்ள தர்காவில் வழிபாடு நடத்த தவறில்லை. ஆனால், அசைவ உணவு கொண்டு சென்று சாப்பிடலாமா? மலை என்ன கசாப்பு கடையா? மலையில் ஆட்டை அறுத்து வழிபாடு நடத்தக்கூடாது. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒரு மதத்தினரை புண்படுத்தும் வகையில் யாரும் நடக்கக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி நவாஸ்கனி அசைவ உணவு சாப்பிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றது தவறு.
ஆதீன மடத்தில் 2 மாதத்துக்கு முன்பு ஒருவர் வேலைக்குச் சேர்ந்தார். அவன் என்னை திருச்சி அருகே கொலை செய்ய முயற்சித்தார். அதனால் வேலையை விட்டு அனுப்பி விட்டேன். அவர் தீவிரவாதியாக இருப்பாரோ என சந்தேகமாக உள்ளது. மக்கள் அவரவர் சமயத்தில் வழிபாடு நடத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு எனது சிறந்த நண்பர். காசி விஸ்வநாதர் கோயிலில் பூஜையும், பள்ளிவாசலில் தொழுகையும் மட்டும் நடத்த அனுமதிக்க வேண்டும், அவரவர் மத வழிபாட்டை தவிர மற்ற செயல்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, மதுரை திருப்பரங்குன்றத்தில் மலைமேலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு தடை விதித்த நிலையில், எஸ்டிபிஐ கட்சியினர் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்து முன்னணியினரும் பேரணி நடத்தினர். இது தொடர்பாக இரு தரப்பிலும், 400 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டம், மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமீது, வக்பு வாரிய தலைவரும், ராமநாதபுரம் எம்.பி.யுமான நவாஸ்கனி திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று, தர்கா பகுதியை ஆய்வு செய்தனர். நவாஸ்கனி எம்.பியுடன் மலைக்கு சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மலைக்கு போகும் படிக்கட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டதாக சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.