போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றம், போக்குவரத்து நெரிசலை அதிகரித்துள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
அண்ணாசாலையில் இருந்து சேப்பாக்கம், திருவல்லிக்கேணி செல்லும் வாகனங்கள் அண்ணாசிலை சந்திப்பில் இருந்து வாலாஜா சாலை வழியாக திரும்பி செல்லும். சேப்பாக்கத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், திருவல்லிக்கேணியில் உள்ள கடைகளுக்கு பொருட்களை வாங்க செல்லும் பொதுமக்கள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா தாய்சேய் நல மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள், மெரினா கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலர் இந்த வாலாஜா சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். குறிப்பாக, அண்ணாசாலை, அண்ணாசிலை சந்திப்பில் சிக்னலில் வாகனங்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டி இருந்ததால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அண்ணாசிலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாணும் வகையில், 10 மாதத்துக்கு முன்பு போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.
அதன்படி, வாலாஜா சாலையில் இருந்து சிம்சன் வழியாக பாரிமுனை மற்றும் சென்ட்ரல் செல்லும் வாகனங்கள் அண்ணாசிலை சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பவதற்குப் பதிலாக, இடது புறம் திரும்பி சற்று தொலைவு சென்று மீண்டும் வலதுபுறம் யு-டர்ன் முறையில் திரும்பி செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால்,இந்த மாற்றத்தால் எவ்வித பயனும் ஏற்படவில்லை. மாறாக, போக்குவரத்து நெரிசலை அதிகரித்துள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் தெரிவித்ததாவது: அண்ணாசிலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வு செய்து தீர்வு காணாமல், அவர்களுக்கு மனதில் தோன்றியதை செயல்படுத்தும் விதமாக இந்தப் போக்குவரத்து மாற்றத்தை செய்துள்ளனர்.
இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. அத்துடன், யு-டர்ன் எடுத்து திரும்பும் போது, எதிர்புறத்தில் உள்ள பிளாக்கர்ஸ் சாலையில் வாகனங்கள் வருவதால் பேருந்து உள்ளிட்ட பெரிய வாகனங்கள் எளிதாக திரும்ப முடியாமல் கடும் அவதிப்படுகின்றன. மேலும், அந்த இடத்தில் சாலையைக் கடக்கும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.
எனவே, பழைய படி வாலாஜா சாலையில் இருந்து பாரிமுனை, சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் வாகனங்கள் அனைத்தையும் அண்ணாசிலை சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி செல்லும் வகையில் போக்குவரத்தை மாற்றி அமைக்க வேண்டும். அதேபோல், எல்ஐசியில் இருந்து பாரிமுனை நோக்கிச் செல்லும் வாகனங்கள் பழையபடி அண்ணசாலை தலைமை அஞ்சல் நிலையம் வழியாக செல்லும்படி மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.