பெங்களூரு,
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி இன்று காலை 10 புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.
விமானத்தை தொடர்ந்து இயக்குவது ஆபத்தானது என்பதை உணர்ந்த விமானி, தொழில்நுட்பக் கோளாறு குறித்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானம் உடனடியாக பெங்களூரு விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டது.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் மீண்டும் பெங்களூருவில் தரையிறங்கியது என்றும், அவசரமாக விமானம் தரையிறங்கவில்லை என்றும் தெரிவித்தனர். எனினும், இது குறித்து விமான நிறுவனத்திடம் இருந்து உடனடியாக எந்த தகவலும் வரவில்லை.