மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் உள்ள ஆயுத தொழில்சாலையில் நேற்று காலை நடைபெற்ற வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர்.
மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் ஜவஹர் நகர் என்ற பகுதியில் ஆயுத தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வெடிமருந்து தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர், 7 பேர் காயம் அடைந்தனர். இங்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். புல்டோசர்கள் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டன.
இந்த விபத்து குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘ மகாராஷ்டிரா பந்தாராவில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன’’ என தெரிவித்துள்ளார். இதேபோல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.