புதுடெல்லி,
ஆந்திராவில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநில முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவரான வி.விஜயசாய் ரெட்டி இன்று தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
ராஜ்யசபாவில் ஆறு ஆண்டு பதவிக்காலத்தில் மூன்றரை ஆண்டுகள் மீதமுள்ள போதிலும், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததாகவும், தனது ராஜினாமாவை மாநிலங்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளேன், அவர் அதை ஏற்றுக்கொண்டார் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறேன். எந்த அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன். பதவி, சலுகைகள், பணத்திற்காக எதையும் எதிர்பார்த்து ராஜினாமா செய்யவில்லை. இந்த முடிவு முற்றிலும் எனது தனிப்பட்ட முடிவு. யாரும் என்னை ராஜினாமா செய்யும்படி கூறவில்லை என பதிவிட்டுள்ளார்.