ம.பி புனித தலங்களில் மதுவிலக்கு: உஜ்ஜைன் கோயில் 'மது பிரசாத'த்துக்கு தடை இல்லை!

போபால்: மத்தியப் பிரதேசத்தில் 17 புனித தலங்களில் மது விலக்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ள நிலையில், உஜ்ஜைன் கோயில் ‘மது பிரசாத’த்துக்கு தடை இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மகேஷ்வர் என்ற நகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மாநிலத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது என்றும், முதற்கட்டமாக 17 புனித தலங்களில் மது விலக்கு அமல்படுத்தப்படும் என்றும் கூறினார். உஜ்ஜைன் மாநகராட்சி, டாடியா, மைஹார், மண்டலா, முல்தாய், பாண்டா மற்றும் மண்ட்சௌர் ஆகிய ஆறு நகராட்சிகள், அமர்கண்டக், ஓம்காரேஷ்வர், மகேஷ்வர், மண்டலேஷ்வர், ஓர்ச்சா, சித்ரகூட் ஆகிய ஆறு நகர பஞ்சாயத்துகள் மற்றும் நான்கு கிராம பஞ்சாயத்துகள் என 17 புனித தலங்களில் மதுவிலக்கு முதற்கட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது.

செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர் ஒருவர் முதல்வரிடம், உஜ்ஜைன் கால பைரவர் கோயிலில் மது படைக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதல்வர் மோகன் யாதவ், பிரசாதத்தை நீங்கள் கோயிலுக்கு எடுத்துச் செல்லலாம் என்றார். அதேநேரத்தில், உஜ்ஜைன் நகரில் தற்போதுள்ள மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என குறிப்பிட்டார். மேலும், மாநிலத்தின் புனித நதியான நர்மதா நதிக்கரையின் இருபுறமும் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் மதுவிலக்கு ஏற்கனவே அமலில் உள்ள நிலையில் அது தொடரும் என்றும் மோகன் யாதவ் கூறினார்.

உஜ்ஜைன் மாநகரில் உள்ள கால பைரவர் கோயிலில், சாமிக்கு மது படைக்கப்படும் வழக்கம் உள்ளதால், அது தொடருமா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கால பைரவர் கோயில் அர்ச்சகர் ஓம் பிரகாஷ் சதுர்வேதி, “கோயிலின் பாரம்பரிய நடைமுறையை மாற்றக் கூடாது. தற்போது கோயிலுக்கு வெளியே அரசு சார்பில் தனியாக கவுன்டர் அமைக்கப்பட்டு மது விற்கப்படுகிறது. இது தொடர வேண்டும். இதன்மூலம், மது படையலிடப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும்.

மதுவிலக்கு இருந்தபோதிலும் கடந்த 2016ம் ஆண்டு சிம்ஹஸ்தா திருவிழாவின்போது மது படைக்கப்பட்டது. இந்த கடவுள்கள் தமஸ் குணம் கொண்டவர்களாக கருதப்படுகிறது. இதேபோல், காளி கோயிலிலும் மது படைக்கப்படுகிறது” என தெரிவித்தார்.

இந்நிலையில், கலால் வரித்துறை ஆணையர் ராஜ்நாராயண் சோனி, மது பிரசாதம் தொடர்பாக அரசு முடிவு செய்யும். தற்போது கோயிலுக்கு வெளியே 2 கவுன்டர்கள் மூலம் மது விற்கப்பட்டு வருகிறது. அவை கலால்துறையின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்படுகின்றன. இதன் அருகே உரிமம் பெற்ற மதுக்கடைகள் எதுவும் கிடையாது என தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மோகன் யாதவ், அடுத்த நிதி ஆண்டு தொடங்கும் ஏப்ரல் 1-ம் தேதி, இந்த 17 புனித தலங்களிலும் மதுக்கடைகள் இருக்காது என உறுதி அளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.